பெஞ்சமின் நெதன்யாகு x page
உலகம்

இஸ்ரேலின் சதி திட்டமா இது? 4000 KM இலக்கை நாங்கள் தாக்கவில்லை.. ஈரானின் மறுப்புக்கு காரணம் என்ன?

ஈரான் முதல்முறையாக 4 ஆயிரம் கிலோமீட்டர் வரை செல்லும் ஆயுதங்களை ஏவியதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் கூறிவந்த நிலையில், அதுகுறித்த செய்திகளை ஈரான் மறுத்துள்ளது.

Praveen Joshva L

ஈரான் கடந்த சில ஆண்டுகளாக தாங்கள் 2 ஆயிரம் கிலோமீட்டர் வரை செல்லும் ஆயுதங்களையே தயாரித்து வந்ததாகவும், அதனைத் தாண்டி தங்கள் வரம்பை அதிகரிக்கவில்லை என்றும் கூறி வந்தது. ஆனால், இரு நாட்களுக்கு முன்னர் முதல்முறையாக ஈரான் 4 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுடைய இலக்குகளை நோக்கி ஏவுகணைகளை ஏவியதாகச் செய்திகள் வெளியாகின.

இந்தியப் பெருங்கடலில் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நாடுகளுக்குச் சொந்தமான கூட்டுப் படைத் தளத்தைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் அரசுகள் அறிக்கை வெளியிட்டன.

மேலும், ஈரான் ஏவிய ஓர் ஏவுகணை நடுவானிலேயே செயலிழந்த நிலையில், மற்றொன்றை அமெரிக்கக் கடற்படையின் போர்க்கப்பல் SM-3 இடைமறிப்பு ஏவுகணை மூலம் தடுத்து அழித்தது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்துப் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரானின் ஏவுகணைகள் லண்டன், பாரிஸ் நகரங்களையே தாக்கக்கூடியது என்றும், இதன் பின்பாவது உலக நாடுகள் ஈரானுக்கு எதிராக களமிறங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

ஆனால், 4 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுடைய இலக்குகளை நோக்கி தாங்கள் எந்த ஏவுகணைகளையும் ஏவவில்லை என ஈரான் மூத்த ராணுவ அதிகாரி கூறியதாக அல் ஜஸீரா ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக ஈரானுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் களமிறங்க வேண்டும் என இஸ்ரேல், அமெரிக்காவே கூட்டுச் சேர்ந்து இதுபோன்ற வேலைகளில் இறங்கியுள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.

தாங்கள் அணு ஆயுதங்களை உருவாக்கவில்லை என்று ஈரான் கூறினாலும், அந்த நாடு அணு ஆயுதங்களை உருவாக்குவதாக இஸ்ரேல் தொடர்ந்து கூறி வந்தது. இதுகுறித்த உறுதியான தகவல் இல்லை என்றாலும், இஸ்ரேலின் பேச்சை நம்பியே ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா களமிறங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.