ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்குப் பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஈரானில் இருந்து ஏவப்பட்ட 15 ஏவுகணைகள் மற்றும் 4 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் அமெரிக்கப் படைகள் அப்பகுதி வழியாக வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தொடங்கின. மேலும், ஈரானுக்குச் சுங்க வரி தரக்கூடாது எனவும் தெரிவித்திருந்தன. இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்குப் பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஈரானில் இருந்து ஏவப்பட்ட 15 ஏவுகணைகள் மற்றும் 4 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலை சவூதி அரேபியா, ஐக்கிய அமீரகம், பக்ரைன், குவைத், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த மாதம் போர்நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு, உலகின் மிக முக்கியமான எரிசக்தி கப்பல் போக்குவரத்துப் பாதையைத் தடைநீக்கம் செய்ய இராணுவ பலத்தைப் பயன்படுத்திய முதல் வெளிப்படையான தாக்குதல் முயற்சி இதுவாகும். இது தங்களின் அனுமதியுடன் மட்டுமே நடக்க முடியும் என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை கூறியுள்ளது. கப்பல் காப்பீட்டுச் செலவும் கடுமையாக உயர்ந்துள்ளது. பல வாரங்களாக, அமெரிக்கக் கடற்படை, ஈரானின் கடல்வழி வர்த்தகத்தைத் தடுத்து வருகிறது, இதுவே ஒரு போர் நடவடிக்கை என்று ஈரான் கூறுகிறது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழைவதை ஈரான் கடற்படை தடுத்தது. ஈரானின் எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததைத் தொடர்ந்து, ஜாஸ்க் தீவுக்கு அருகே ஓர் அமெரிக்கப் போர்க்கப்பலை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஜஸ்கி நீரிணையின் தெற்கு நுழைவாயிலுக்கு அருகில் சென்றுகொண்டிருந்த ஒரு போர்க்கப்பல் மீது இரண்டு ஏவுகணைகளை வீசிய பின்னர், அந்தக் கப்பல் திரும்பிச் சென்றது என்றும் ஹார்முஸ் நீரிணை வழியாகக் கடந்துசெல்ல முயற்சிக்க வேண்டாம் என்று ஈரானின் ஆயுதப் படைகள் பல வெளிநாட்டுக் கப்பல்களை எச்சரித்திருந்ததாக மேலும் அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா இதை மறுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்களின் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்க முயன்ற ஈரானின் 6 சிறிய படகுகளை அமெரிக்க ராணுவம் மூழ்கடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் ஈரான் இதை மறுத்துள்ளது.