Bushehr Nuclear Power Plant  reuters
உலகம்

அவசரமாக அயோடின் மாத்திரைகள் வழங்கும் ஈரான்.. 3வது உலகப்போர் அச்சமா?

அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம்: ட்ரம்பின் அடுத்தகட்ட தாக்குதலுக்கு எதிராக ஈரானின் தயாரிப்பு.

PT WEB

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் தற்போது ஒரு முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, அணுசக்தி நிலையங்களுக்கு அருகே வசிக்கும் மக்களுக்கு சுமார் 1.8 லட்சம் அயோடின் மாத்திரைகளை விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.

ஏற்கெனவே அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், ஈரானின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அப்படி என்ன நடக்கிறது ஈரானில்? எதற்காக மக்களுக்கு இவ்வளவு மாத்திரைகள் வழங்கப்படுகின்றன?

Bushehr Nuclear Power Plant

ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள புஷேர் நகரில்தான் இந்த மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அங்குள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,80,000 மாத்திரைகள் விநியோகிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணுமின் நிலையங்களில் ஏதேனும் விபத்து ஏற்பட்டாலோ அல்லது அணுசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டாலோ கதிரியக்கப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது வெளியாகும் கதிரியக்க அயோடின், மனித உடலுக்குள் சென்று தைராய்டு சுரப்பியில் தங்கிவிடக்கூடும். இதனால் குறிப்பாக குழந்தைகளுக்கு தைராய்டு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.

இதைத் தடுப்பதற்காகவே பொட்டாசியம் அயோடைடு எனப்படும் KI மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இந்த மாத்திரைகள் உடலுக்குத் தேவையான சாதாரண அயோடினை தைராய்டு சுரப்பியில் நிரப்புவதன் மூலம், கதிரியக்க அயோடினை அந்தச் சுரப்பி உட்கிரகிப்பதைத் தடுக்க உதவுகின்றன.

Bushehr Nuclear Power Plant

உலக சுகாதார அமைப்பின் விளக்கத்தின்படி, இந்த மாத்திரைகள் அனைத்து வகையான கதிர்வீச்சு பாதிப்புகளிலிருந்தும் பாதுகாப்பு அளிக்காது. தைராய்டு சுரப்பியை கதிரியக்க அயோடினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மட்டுமே பாதுகாக்கும்.

மேலும், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த மாத்திரைகள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி மட்டுமே இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் என WHO எச்சரிக்கிறது.

இதற்கிடையே, லண்டனில் இருந்து வெளியாகும் 'தி டைம்ஸ்' நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரான் சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் இந்த மாத்திரைகள் விநியோகம் தொடர்பான தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

Mojataba Khamenei & Trump

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை இனி நம்ப முடியாது என்றும், அவர் எந்த நேரத்திலும் மீண்டும் தாக்குதலைத் தொடங்கலாம் என்றும் ஈரான் கருதுவதாக அல்ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஈரானின் எஞ்சியுள்ள அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று ட்ரம்ப் எச்சரித்திருந்தார். குறிப்பாக, நிலத்தடியில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் பிக்ஆக்ஸ் மவுண்டன் அணுசக்தி மையத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனால், அமெரிக்காவின் அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள ஈரான் தயாராகி வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.