trump & mojtaba  Pt web
உலகம்

"ட்ரம்ப் வாயை மூடு" - போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது எப்படி? கேலி செய்த ஈரான்!

பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் போர் நிறுத்தத்தை நீட்டித்த ட்ரம்பின் முடிவை கேலிசெய்யும் வகையில் AI ஆல் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது ஈரான் தூதரகம்.

PT WEB

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர், இரண்டு வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அது ஏப்ரல் 22 உடன் முடிவடைந்தது. போரை நிறுத்தும் பணியில் அமெரிக்கா - ஈரான் இடையே இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் தயாரானது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையை ஈரான் புறக்கணித்தது. அமெரிக்கா வைக்கும் கோரிக்கைகளும், கெடுபிடிகளுமே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்க முற்றுகை தொடரும் எனவும், அதேநேரத்தில், போர் நிறுத்தம் நீடிப்பதாகவும் பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தைத் தயாரிக்க ஈரானுக்கு இது அதிக அவகாசம் அளிக்கும் என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார்.

அதிபர் ட்ரம்பின் இந்த முடிவைக் கேலி செய்யும் வகையில், ஹைதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகம் செயற்கை நுண்ணறிவு (AI ) மூலம் உருவாக்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

trump

45 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் பலர் அதில் கலந்துகொள்வதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஈரானின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவில்லை. இந்த காட்சியுடன் துவங்கும் அந்த வீடியோவி, ‘நாங்கள் ஈரானுடன் மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம்’ என்று ட்ரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் டைப் செய்வதுபோல் காட்டப்பட்டுள்ளது.

பின்னர் அந்த வீடியோ 2,000 ஆண்டுகளுக்குப் பிறகு என்ற காட்சிக்கு மாறுகிறது. அதில் விரக்தியில் இருக்கும் ட்ரம்ப், ’ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், அவர்கள் மீது குண்டு வீசுவோம்’ என்று மிரட்டியபின், அப்படியானால் ஈரானியர்கள் எங்கே? என்று கேட்கிறார். அதற்கு ஒர் உதவியாளர், ’வாயை மூடு, ட்ரம்ப்’ என்று எழுதப்பட்ட ஒரு குறிப்பை அவரிடம் கொடுக்க, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட அந்த ட்ரம்ப், சரி, அப்படியானால் பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க நான் போர் நிறுத்தத்தை நீட்டிக்கிறேன் என்று கூறுகிறார். பின்னணியில் சிரிப்பொலி கேட்கிறது.

போர் நிறுத்தம் எப்படி நீட்டிக்கப்பட்டது? என்பது குறித்த இந்த வீடியோ ஈரானில் வைரலாகி வருகிறது என ஹைதராபாத் தூதரகம் தனது X தளத்தில் வெளியிட்டுள்ளது.