MQ-1 drone  web
உலகம்

பேச்சுவார்த்தையில் இழுபறி.. அமெரிக்காவின் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்!

அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஈரானிய வான்வெளிக்குள் தாக்குதல் நடத்த நுழைந்ததால் சுட்டு வீழ்த்தினோம் என்று ஈரான் கூறியுள்ளது.

PT WEB

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா–இஸ்ரேல்–ஈரான் மோதல் காரணமாக உலக பொருளாதாரம் சீர்குலைந்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைகள் இழுபறியாக நீள்கின்றன. ஈரானின் வான் எல்லைக்குள் நுழைந்த MQ-1 உளவு ட்ரோனை IRGC சுட்டு வீழ்த்தியுள்ளது.

செய்தியாளர்: M.மீரா

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போரின் காரணமாக 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் உலகளவில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. மேலும் போரை நிரந்தரமாக நிறுத்தும் பேச்சுவார்த்தைகளும் இழுபறியாகவே இருந்து வருகிறது.

Trump & Marco Rubio

கடந்த வாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ பேச்சுவார்த்தைகள் முடிவடைய இன்னும் சில நாட்கள் எடுக்கும் என்று கூறியிருந்தார். அதேநேரத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பேச்சுவார்த்தைகள் நன்றாக முன்னேறி வருவதாக கூறியதோடு, அவை தோல்வியடைந்தால் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அச்சுறுத்தியிருந்தார்.

இவ்வாறு பேச்சுவார்த்தைக்கான இழுபறிகளுக்கு மத்தியில் ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் புதைத்துக் கொண்டிருந்த படகுகள் மீது அமெரிக்க தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து ஈரானியப் படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து நமது படைகளைப் பாதுகாக்க, அமெரிக்கப் படைகள் தெற்கு ஈரானில் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தின என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) அறிவித்தது.

RQ4 drone

அமெரிக்காவின் இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானிய வான் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்காவின் MQ-9, RQ-4 போன்ற ஆளில்லா விமானங்களை ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியது.

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் இவ்வாறு வளைகுடா முழுவதும் மறைமுக மோதல்களும் தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஈரானின் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன MQ-1 உளவு ட்ரோன் விமானத்தை, தங்களது வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (IRGC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் தாக்குதல் நடத்தவே அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நுழைந்ததாகவும் அதனாலேயே அதனைச் சுட்டு வீழ்த்தியதாகவும் ஈரான் கூறியுள்ளது.