அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதுடன் கச்சா எண்ணெய் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இது கப்பல் சரக்குக் கட்டணங்களை நேரடியாகப் பாதிப்பதுடன், உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கும் கொண்டு செல்வதற்கும் ஆகும் செலவுகளையும் அதிகரித்துள்ளது. மேலும் உரம் போன்ற அத்தியாவசிய மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகளின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி உணவுப் பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.
இந்தப் போரினால் முக்கிய விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்து, எரிசக்தி செலவுகள் கடுமையாக உயர்ந்ததால், உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. காய்கறி எண்ணெய்கள், இறைச்சி மற்றும் தானியங்களின் விலைகளில் ஏற்பட்ட திடீர் உயர்வுகளால், ஏப்ரல் மாதத்தில் பொருட்களின் விலைகள் 1.6% அதிகரித்துள்ளதாக ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. உணவு மற்றும் விவசாய அமைப்பின் அறிக்கையின்படி, இந்த 1.6% உயர்வு ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட 2.5% அதிகம் என்று தெரிய வந்துள்ளது.
தாவர எண்ணெய்களிலிருந்து பெறப்படும் உயிரி எரிபொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், தாவர எண்ணெய் விலை குறியீடு ஒரே மாதத்தில் 5.9% உயர்ந்துள்ளது. இந்தப் போர் 90-வது நாள் வரை நீடித்தால், 2026-இன் பிற்பகுதியிலும் 2027-லும் உணவு நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.