ஈரானுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தும் சாத்தியத்தைப் பற்றி வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில், துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஜெனரல் டான் கெய்ன் கவலை வெளியிட்டதாக தகவல். ஆயுதக் கையிருப்பு மற்றும் எதிர்மறை விளைவுகள் குறித்து எச்சரிக்கை எழுந்த நிலையில், 13 நாட்கள் தொடர்ந்த இரவுத் தாக்குதல்களை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
செய்தியாளர் - M. மீரா
வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு சந்திப்பின்போது, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான போரைத் தீவிரப்படுத்தும் சாத்தியக்கூறு குறித்து பரிசீலித்து வந்த நிலையில், துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் கூட்டுப் படைத் தலைமைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் ஆகிய இருவரும் அதுகுறித்த கவலைகளை எழுப்பியதாக, CNN செய்தி கூறுகிறது.
இந்த சந்திப்பில் அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு மற்றும் பிற சாத்தியமான எதிர்மறை விளைவுகள் குறித்து கெய்ன் குறிப்பாகக் கவலைகளை எழுப்பியதாகவும் அச்செய்தி கூறுகிறது.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாகத் தொடர்ச்சியாக அதாவது 13 நாட்கள் இரவுகள் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை இரவு, ஈரான் மீதான தனது தீவிரமான தாக்குதல்களை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதற்கான காரணம் எதையும் அமெரிக்கா கூறவில்லை.
தொடர்ச்சியான இரவுத் தாக்குதல்களை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியதற்கு, ஆயுதக் கையிருப்பு குறித்த கவலையா அல்லது போரைத் தீவிரப்படுத்துவது குறித்த எச்சரிக்கையா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
இந்நிலையில் ஈரானின் ஆதரவுபெற்ற ஏமன் ஹவுதி போராளிகள், செங்கடல் அருகே உள்ள சவூதி அரேபியாவின் ஜிசான் மற்றும் யான்பு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் சவுதி அரசுக்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் 'அராம்கோ'வின் (Aramco) தளங்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஹவுதி அமைப்பின் ராணுவப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் இரண்டாவது முக்கிய கடல்வழிப் பாதையான பாப் அல் மண்டேப் - இல் எரிசக்தி விநியோகத்தை அச்சுறுத்தும் விதமாக அமைந்துள்ளது.
மின் கட்டமைப்புகள் தாக்கப்பட்டால் செங்கடல் எண்ணெய் வழித்தடமான பாப் அல் மண்டேப் - வழியை மூடுமாறு ஹவுதிகளுக்கு ஏற்கனவே ஈரான் உத்தரவிட்டிருந்தது.
இதே போல காஸ்பியன் கடல் பகுதியில் ஈரானின் ராணுவ தளவாடங்களை ஏற்றி வந்த கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக யுக்ரேன் அதிபர் கூறியிருந்தார். கூடவே மத்திய கிழக்கில் ஈரான் தாக்குதல்களைத் துல்லியமாக நடத்த ரஷ்யா தனது செயற்கைக்கோள் தரவுகளை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து ஈரான் அந்தத் தாக்குதல் தொடர்பாக உக்ரைன் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதில் ஒருவர் காயமடைந்த்தாகவும் மற்றொருவர் கொல்லப்பட்டதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுக்காமல் விடமாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது .
ஹார்முஸ் நீரிணையைத் தாண்டி, செங்கடல் மற்றும் காஸ்பியன் கடல் பகுதிகளுக்கும் ஈரான் மோதலின் தாக்கம் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு மட்டுமல்லாமல், உலகின் முக்கிய கடல்வழிப் பாதைகள், எரிசக்தி விநியோகம் மற்றும் சர்வதேச பாதுகாப்பும் புதிய அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. இந்த பதற்றம் மேலும் தீவிரமடைந்தால், பிராந்தியப் போர் உலகளாவிய நெருக்கடியாக மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.