அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தப் போரின் காரணமாக, உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. இதன்காரணமாக, உலகம் முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் தான், பாகிஸ்தானின் மத்தியஸ்தம் காரணமாக 2 வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையும் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு தரப்புகள் இடையேயும் நடைபெற்று வருகிறது.
அதேசமயம் இப்போரில், ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தி வந்தது. ஈரான் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில், லெபனான் மீதான இஸ்ரேலின் போரை நிறுத்த வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்திருந்தது. ஆனால், லெபானான் மீதான் தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து வந்ததால், ஹார்முஸை திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது.
இந்த சூழலில் தான், லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பிபி நெதன்யாகு ஆகியோருடன் நடத்தியப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையேயான போரை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க முன்வந்துள்ளன என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்தார். இதனையடுத்து சில மணிநேரங்களில், அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்கும் ஹார்முஸ் நீரிணை திறக்கப்படுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி நேற்று தெரிவித்தார். அதேசமயம், ராணுவக் கப்பல்கள் ஹார்முஸைத் கடப்பதற்கு அனுமதி இல்லை எனவும் தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்த சூழலில் தான், ஈரானின் முடிவைத் தான் வரவேற்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த நிலையில், போர் சமயத்தில் 110 டாலருக்கு மேல் இருந்த 1 பேரல் கச்சா எண்ணெயின் விலை தற்போது, 90 டாலருக்கும் கீழ் குறையத் தொடங்கியது. இந்த நிலையில், இன்று மீண்டும் ஹார்முஸை மூடுவதாக ஈரான் அறிவித்திருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து ஈரான் ராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் துறைமுகங்களில் இருந்து கப்பல்கள் வெளியேற முடியாமல் அமெரிக்க கடற்படை தடுத்து வருவதாகவும், இதற்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அமெரிக்கா தனது முற்றுகையைத் தொடர்ந்தால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு துளி எண்ணெய் கூட வெளியேற அனுமதிக்க மாட்டோம் எனவும் ஈரான் எச்சரித்திருக்கிறது.