Friedrich Merz & Trump Reuters
உலகம்

”ஈரானை வீழ்த்தவே முடியாது” - ட்ரம்புக்கு சவால் விடும் ஜெர்மனி!

அமெரிக்கா-ஈரான் மோதல்: பேச்சுவார்த்தைதான் தீர்வு என ஜெர்மனி வலியுறுத்தல்

PT WEB

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் ராணுவ மோதல்கள் குறித்து, அமெரிக்காவின் முக்கிய நேட்டோ (NATO) கூட்டாளியான ஜெர்மனியின் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) அதிரடியான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஈரான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த கருத்து அமைந்துள்ளது. . ஈரானுடனான மோதலை ராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்க்க முடியாது என்றும், பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காண வேண்டும் என்றும் ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.

German Chancellor Friedrich Merz and South Korean President Lee Jae Myung

தென் கொரியாவின் சியோல் நகரில் அக்டோபர் 30-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த மோதலை ராணுவ ரீதியாகத் தீர்க்க முடியாது. இது தூதரக நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலமாகவே தீர்க்கப்பட வேண்டும்” என்று கூறினார். ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகச் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், மெர்ஸின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் அதிநவீன ராணுவ பலத்திற்கு மத்தியிலும், ஈரானின் தற்காப்பு மற்றும் பதிலடி கொடுக்கும் திறன் இந்த போரை அமெரிக்காவிற்கு எளிதானதாக மாற்றவில்லை என்பதை இது காட்டுகிறது. அமெரிக்காவும் ஜெர்மனியும் நேட்டோ அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான ஜெர்மனியின் தலைவரே ராணுவ நடவடிக்கையால் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்று கூறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

Friedrich Merz & Trump

மேலும், ஈரான் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளும் கடுமையான பொருளாதார பாதிப்புகளைச் சந்தித்து வருவதாக மெர்ஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைப் பாதித்துள்ளன. இதனால் எரிபொருள் விலைகள் அதிகரித்து, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்திலும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த, 8 மாதங்களில் எரிசக்தி விலை உயர்வால் மட்டும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் 100 பில்லியன் யூரோவுக்கும் அதிகமான கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக மெர்ஸ் கூறியுள்ளார். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகம். எனவே, போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதில் ஜெர்மனிக்கு நேரடியான ஆர்வம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.