ஈரான் குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு அமெரிக்க முற்றுகையைத் தாங்கிக்கொள்ள முடியும் என்று மத்திய புலனாய்வு முகமை (சிஐஏ) மதிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில், உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் அமெரிக்கப் படைகள் அப்பகுதி வழியாக வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தொடங்கின. மேலும், ஈரானுக்குச் சுங்க வரி தரக்கூடாது எனவும் தெரிவித்திருந்தன. இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கும் அமெரிக்காவின் Project Freedom நடவடிக்கைக்குப் பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியது. மறுபுறம், ஈரானில் உள்ள காசிம் துறைமுகம் மற்றும் ஈரானின் தெற்கே உள்ள பந்தர் அப்பாஸ் நகர் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த நிலையில், ‘ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க நாங்கள் ஒருபோதும் உரிமை வழங்க மாட்டோம். அதற்குக் அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கின்றது. ஈரான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், எதிர்காலத்தில் இன்னும் கடினமாகவும், ஆக்ரோஷமாகவும் அவர்களை நாங்கள் வீழ்த்துவோம்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ள அவர், ‘போர் விரைவில் முடிவுக்கு வரும்’ எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், ’ஈரான் குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு அமெரிக்க முற்றுகையைத் தாங்கிக்கொள்ள முடியும்’ என்று மத்திய புலனாய்வு முகமை (சிஐஏ) மதிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஐஏ மதிப்பீட்டின்படி, ஈரான் தனது ஏவுகணைகளில் சுமார் 70 சதவீதத்தையும், நகரும் ஏவுதளங்களில் 75 சதவீதத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
அமெரிக்காவுடன் போர் நிறுத்தம் ஏற்பட்ட நேரத்தில், ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் ஏவுதளங்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கைச் சேதமின்றி வைத்துள்ளது. மேலும், ஈரான் தனது கிட்டத்தட்ட அனைத்து நிலத்தடி சேமிப்புக் கிடங்குகளையும் மீட்டு மீண்டும் திறக்க முயற்சி செய்வதாகவும், சேதமடைந்த சில ஏவுகணைகளைப் பழுது பார்ப்பதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.