ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத்தாக்குதலால், மத்தியக் கிழக்கில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய போரின் ஒருபகுதியாக, உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டது. இதன்காரணமாக, உலகளவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையிலான போருக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மின்னணு முறையில் ஜூன் 17 அன்று கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய 60 நாட்கள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த சில நாட்களாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வணிகக் கப்பல்களின் போக்குவரத்து மீண்டும் மெதுவாகத் தொடங்க ஆரம்பித்திருந்தது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் குறையத் தொடங்கிய நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று, ஹார்முஸ் ஜலசந்தியில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற ஒரு வர்த்தகக் கப்பலை ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியிருந்தது. ஐநா அமைப்பின் அதிகாரப்பூர்வ மீட்புப் பாதையைப் பயன்படுத்தாமல் ஓமன் நாட்டு எல்லைக்கு மிக அருகில் பயணித்ததே ஈரானின் இந்த தாக்குதலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்தநிலையில் தான், ஈரானின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, நேற்றைய முன் தினம் அதாவது ஜூன் 26-ம் தேதி இரவு ஈரானின் ஏவுகணை, ட்ரோன் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் கடலோர ரேடார் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடந்தியிருந்தது. இதைத் தொடர்ந்து, ஈரானின் ஆபத்தான நடத்தைக்கு ஒரு சக்திவாய்ந்த பதிலடி கொடுத்துள்ளோம் என அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்திருந்தது. மேலும்,, வன்முறைக்கு வன்முறையால் பதிலளிக்கப்படும் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வான்ஸ் எச்சரித்திருந்தார்.
இந்தசூழலில் தான், பஹ்ரைன் எல்லைக்குள் ஈரான் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியிருப்பதாக அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டியிருக்கிறது. இந்த தாக்குதலை, "நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் எதிரான வெளிப்படையான அச்சுறுத்தல்" என்றும் பஹ்ரைன் கண்டித்திருக்கிறது. அதேசமயம், இந்த தாக்குதலில் உயிரிழப்போ அல்லது பெரிய அளவிலான சேதமோ ஏற்படவில்லை.
இந்த தாக்குதல் குறித்து தெரிவித்துள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC), பஹ்ரைனை நேரடியாகத் தாக்கியதாகக் கூறாமல், பஹ்ரைன் மற்றும் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ இலக்குகளை குறிவைத்து நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்திருக்கிறது. இது அமெரிக்காவின் முந்தைய தாக்குதலுக்கான பதிலடி என்றும் கூறியுள்ளது.
இவ்வாறு, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்ட சில நாட்களுக்குள்ளாகவே பஹ்ரைன் ட்ரோன் தாக்குதல், அமெரிக்காவின் பதிலடி நடவடிக்கைகள், ஈரானின் எச்சரிக்கை போன்றவை மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளன.