அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடக்கும் போரில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும், வளைகுடா முழுவதும் தாக்குதல்களும் மறைமுக மோதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய ஈரான் மீதான தாக்குதல்கள் துவங்கிய நாளிலிருந்தே (பிப்ரவரி 28) அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்ட நாடுகள் அல்லது இஸ்ரேலுடன் உறவுகளை விரிவுபடுத்தும் நாடுகள் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று ஈரான் மீண்டும் மீண்டும் எச்சரித்திருந்தது. மேலும், இந்த மோதலின்போது இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஒரு ரகசிய பயணம் மேற்கொண்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து பதற்றம் மேலும் அதிகரித்தது.
இதனால் தொடர்ச்சியான ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது ஐக்கிய அரபு அமீரகம். கடந்த வாரம், ஃபுஜைரா துறைமுக நகரின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் எண்ணெய் உள்கட்டமைப்பு வசதிகளில் தீ விபத்துகள் ஏற்பட்டதோடு, 3 இந்தியர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) பரக்கா அணுமின் நிலையத்திற்கு (Barakah Nuclear Power Plant) அருகே நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து, அணுப் பேரழிவு குறித்த அச்சங்கள் தீவிரமடைந்துள்ளன. இத்தாக்குதலை இந்தியா, சர்வதேச அணுசக்தி முகமை (IAEA), சவூதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் கண்டித்துள்ளன. இந்தத் தாக்குதல் குறித்து ஐக்கிய அரபு அமீரகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருப்பதாவது, வான் பாதுகாப்பு அமைப்புகள் இரண்டு ஆளில்லா விமானங்களைத் தடுத்து நிறுத்தியதாகவும், மூன்றாவது விமானம் அந்த அணுமின் நிலையத்துக்கு அருகிலுள்ள ஜெனரேட்டரை தாக்கியதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஆளில்லா விமானங்கள் மேற்கு எல்லையிலிருந்து ஏவப்பட்டதாக கூறிய அதிகரிகள் எந்த நாடு என்று பகிரங்கமாக தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோசி, அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், அவை மிக அதிக அளவிலான கதிரியக்க வெளியீட்டிற்கு வழிவகுக்கும் என்றும், அதன் விளைவுகள் தேசிய எல்லைகளைத் தாண்டி வெகுதூரம் பரவும் என்றும் மீண்டும் எச்சரித்துள்ளார். வெளிப்புற மின் அமைப்புகள் அல்லது துணை உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள்கூட, அணு உலை நிலையங்களுக்குள் தொடர்ச்சியான பாதுகாப்பு தோல்விகளைத் தூண்டக்கூடும் என்று அணுசக்தி நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பையோ அல்லது அதன் மைய அமைப்புகளின் செயல்பாட்டையோ பாதிக்கவில்லை என்றும் கதிர்வீச்சு கசிவு இல்லை என்றும் அணுசக்தி ஒழுங்குமுறைக்கான கூட்டாட்சி ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.