அயதுல்லா அலி காமேனி pt web
உலகம்

அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்.. ஈரான் உட்சத் தலைவர் காமேனி உயிரிழப்பு.?

இஸ்ரேல் அமெரிக்கா கூட்டாகிய நடத்திய தாக்குதலில் ஈரானின் உட்சத் தலைவர் காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டுவிட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்நாட்டில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Premkumar S

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி, ஈரானின் உட்சபட்ச தலைவர் காமேனி உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கடந்த சில மாதங்களாக தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வந்தது. அமெரிக்கா தனது இரண்டு முக்கிய விமானம் தாங்கிக் கப்பல்களை ஈரானுக்கு அருகே கொண்டுவந்து நிறுத்தியது நிலைமையில் தீவிரத்தை அதிகரித்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவிய நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் இணைந்து ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக, ஈரானின் உட்சபட்ச தலைவர் காமேனியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ள நிலையில், இந்த இரண்டு தரப்புக்கும் இடையே மீண்டும் போர் உருவாகவுள்ள சூழ்நிலை ஏற்பட்டது.

காமேனி

இந்த சூழலில் தான், அமெரிக்க அதிபர் டிரம்ப், காமேனி கொல்லப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், வரலாற்றின் மிகக் கொடிய மனிதர்களில் ஒருவரான காமேனி இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரான் மக்களுக்கும் உலகின் பல நாடுகளின் மக்களுக்கும் நீதி கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். காமேனி பல நாடுகளின் மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு பொறுப்பானவர் எனவும், அவரது மரணம் அதற்கான நீதி எனவும் ட்ரம்ப் தனது பதிவில் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்திருந்த ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம், காமேனி பாதுகாப்பான இடத்தில் உயிரோடு இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்த சூழலில், ஈரான் உட்ச தலைவர் காமேனி அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்து விட்டதாகவும் மேலும், இந்த தாக்குதலில் காமேனியின் மகன், மருமகன், பேரன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்திருக்கிறது. ஈரானில், 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

அதேபோல, ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய கூட்டுத் தாக்குதலில், ஈரானின் உயர்மட்ட ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்சாதே, ராணுவத் தளபதி ஜெனரல் முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் மீது சேர்ந்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா

தாக்குதலின் பின்னணி!

ஈரான் அணுஆயுத வலிமை பெறுவதை தடுப்பதே அதன் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது. உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 9 நாடுகள் அணுஆயுத திறனை பெற்றுள்ள நிலையில் ஈரானும் அதை நோக்கிச்செல்வதாக அமெரிக்கா கருதுகிறது. இதை தடுத்து நிறுத்த பல ஆண்டுகளாகவே அமெரிக்கா காய் நகர்த்தி வருகிறது. ஈரான் அணுஆயுத வலிமை பெற்றால் தங்கள் இருப்புக்கே ஆபத்து என இஸ்ரேலும் கருதுகிறது.

மறுபுறம் தாங்கள் மின்சார உற்பத்திக்காகவே அணுசக்தி வலிமையை பெறுவதாக ஈரான் கூறிவருகிறது. எனினும் இதை நம்பாத அமெரிக்கா பொருளாதார தடைகள் உட்பட பல்வேறு வழிகளில் ஈரானுக்கு முட்டுக்கட்டை போட்டுவந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்தாண்டு இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. பதிலுக்கு கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் போர் அப்போதைக்கு முடிவுக்கு வந்தது. அணுஆயுத வலிமை தடுப்பு குறித்து அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பேசின. அதில் முடிவு கிடைக்காத நிலையில்தான் தற்போதைய தாக்குதல் தொடங்கியுள்ளது. இம்முறை ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதும் ட்ரம்ப்பின் இலக்குகளில் ஒன்று எனக் கூறப்படுகிறது.