எப்படியாவது அமைதிக்கான நோபல் பரிசை வாங்கிவிட வேண்டும் என மனப்பால் குடித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் எண்ணத்தில் மீண்டும் தீ வைத்து பொசுக்கியிருக்கிறது ஈரான். CEASEFIRE என்னும் வார்த்தையையே நாம் சலார் படத்தில்தான் முதன்முதலில் கேட்டிருப்போம். அந்த அளவுக்கு அந்த வார்த்தை படத்தில் பிரபலம். CEASEFIRE என்றால் குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு தரப்பும் அப்படியே எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும். ஈரான் நேரப்படி இன்று காலை 4.30 மணிக்கு CEASEFIRE அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு நன்றி தெரிவித்த இஸ்ரேலின் நெதன்யாஹூ, அவர்கள் எதை நினைத்து இந்த போரைத் தொடங்கினார்களோ அது நிறைவேறிவிட்டதாக அறிவித்திருந்தார். ஆம், ஈரானின் அணு நிலையங்களை ஒழிப்பதே இஸ்ரேலின் ஆகப்பெரும் குறிக்கோளாக இருந்தது.
ஈரான் அதை அணு நிலையங்கள் என்று சொன்னாலும், இஸ்ரேலும் அமெரிக்காவும் அதை அணு ஆயுத நிலையங்கள் என்றே அறிவித்துவந்தன. அதிலும் ஃபோர்டோ மலைக்குக் கீழ் செயல்பட்டுவந்த அணு நிலையத்தை பதைபதைப்புடனே இஸ்ரேல் அணுகிவந்தது. அதை வீழ்த்துவதற்கு அமெரிக்காவின் உதவியையும் நாடியது. இதுநாள் வரையில் எந்தப் போரிலும் பயன்படுத்தாத பங்கர் பஸ்டர் குண்டுகளை ஃபோர்டோ அணு நிலையத்தின் மீது பிரயோகித்தது அமெரிக்கா. அந்த அணு நிலையம் முற்றிலுமாக நிர்மூலமானதாக அறிவித்தார் டொனால்டு டிரம்ப். ஈரானோ, ஆட்டம் இன்னும் முடியவில்லை என்று சூசகமாக அறிவித்தது. ஆக, இஸ்ரேலுக்கு இந்த 12 நாள் போர் என்பது முழு வெற்றிதான். ஈரானுக்குத்தான் இது பெரிய இழப்பு. அதை ஒட்டித்தான் ஈரானின் வெளியுறவு அமைச்சரான அப்பாஸ் அகர்ஸியும், ஈரான் நேரப்படி நான்கு மணிக்குள் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்திவிட்டால், தாங்களும் நிறுத்திக்கொள்வதாக அறிவித்திருந்தார். இதையொட்டி எல்லாம் சுபம் என்பதாகக் கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவைச் சந்தித்தது. உலக சந்தைகள் பசுமையாக லாபத்தில் தொடங்கின.
12 நாள் நடைபெற்ற போர் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டதில் அப்பாடா என்று பெருமூச்சு விடுவதற்குள் மீண்டும் ஈரானும் இஸ்ரேலும் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் CEASEFIRE என்று அறிவித்த மூன்று மணி நேரத்திற்குள் மீண்டும் இரு பக்கமும் குண்டுமழை பொழிந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரான கட்ஸ், சீஸ்ஃபயர் ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதால், தெஹ்ரானைக் கடுமையாகத் தாக்கும்படி இஸ்ரேல் ராணுவத்துக்குக் கட்டளையிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
அதே சமயம், இஸ்ரேல் மீது ஈரான் மிஸைல் தாக்குதல் நடத்தியது என்னும் செய்தியை முற்றிலுமாக மறுத்திருக்கிறது ஈரான். ஈரானின் ISNA மாணவர் செய்தி ஏஜென்சி மூலம் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறது.