மத்திய கிழக்கில் நீடித்து வரும் அமெரிக்கா–ஈரான் மோதலை முடிக்க, ஈரான் 7 நிபந்தனைகளை ட்ரம்ப் நிர்வாகத்திடம் கத்தார் மூலம் அறிவித்துள்ளது. அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துதல், முடக்கப்பட்ட ஈரானிய நிதியை விடுவித்தல், ஹார்முஸ் நீரிணை மற்றும் துறைமுகங்களுக்கு எதிரான அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
செய்தியாளர் - M.மீரா
மத்திய கிழக்கில் பல மாதங்களாக நீடித்து வரும் அமெரிக்கா–ஈரான் போர், தற்போது சவுதி அரேபியா–ஹவுதி மோதலாலும் மேலும் சிக்கலடைந்துள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு ஈரான் புதிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான 7 நிபந்தனைகளை அமெரிக்காவிடம் ஈரான் தெரிவித்துள்ளது என்று ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி கூறியுள்ளார்.
ரெசாயி வெளியிட்ட தகவலின்படி, ஈரான் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் முக்கியமாக அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துவது, வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானிய நிதியை விடுவிப்பது மற்றும் ஈரானிய துறைமுகங்களுக்கு எதிரான அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவருவது ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும், ஏமனில் ஹவுதிகளுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே தற்போது நடைபெற்று வரும் மோதலும் முடிவுக்கு வர வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
இதனால், ஈரானின் நிபந்தனைகள் அமெரிக்கா–ஈரான் மோதலை மட்டும் கருத்தில் கொண்டவை அல்ல; வளைகுடா மற்றும் செங்கடல் பகுதிகளில் விரிவடைந்து வரும் பிராந்திய மோதலையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.
அமெரிக்கா–ஈரான் இடையே நேரடி பேச்சுவார்த்தை முடங்கியுள்ள நிலையில், கத்தார் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
அந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே ஈரானின் நிபந்தனைகள் கத்தார் மூலம் அமெரிக்காவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரெசாயி கூறியுள்ளார். தற்போது ட்ரம்ப் நிர்வாகத்தின் பதிலை எதிர்பார்த்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஈரான் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காது என்பதையும் ரெசாயியின் கருத்துகள் காட்டுகின்றன. அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் எந்த பலனையும் தராது என்றும், தேவைப்பட்டால் “தீர்மானகரமான போருக்கு” ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோதலில் மற்றொரு முக்கிய விவகாரமாக இருப்பது ஹார்முஸ் நீரிணை. இங்கு அமெரிக்கா தனது கடற்படை நடவடிக்கையை நிறுத்த வேண்டும், ஈரானின் முடக்கப்பட்ட நிதியை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தெஹ்ரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
சமீபத்திய மோதல்களால் ஹார்முஸ் மற்றும் செங்கடல் வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்து தொடர்பான கவலைகளும் அதிகரித்துள்ளன. இதனால், அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டால், அதன் தாக்கம் இரு நாடுகளின் உறவுகளைத் தாண்டி உலகளாவிய எரிசக்தி சந்தையிலும் இருக்கக்கூடும்.
மத்திய கிழக்கில் போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு போர் முடிவை நோக்கி நகரக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், அமெரிக்கா–ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை முயற்சிகள் இன்னும் உறுதியான உடன்பாடாக மாறவில்லை. இப்போது ஈரான் தனது நிபந்தனைகளை வெளிப்படையாக முன்வைத்துள்ள நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் இதற்கு என்ன பதில் அளிக்கப் போகிறது என்பதே அடுத்த முக்கிய கட்டமாக உள்ளது.