ட்ரம்பின் பயணம் திடீரென குறைக்கப்பட்டதும், தடை செய்யப்பட்ட வான்வெளியில் நுழைந்த பொதுவிமானத்தை NORAD F-16 இடைமறித்ததும் அமெரிக்க பாதுகாப்பு கவலைகளை தூண்டியுள்ளன. இதே நேரத்தில் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் கடுமையான பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இதனுடன், ஈரான் ராணுவம் Code 100 என்ற உயர்ந்த எச்சரிக்கை நிலைக்கு சென்றதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வருகின்றன.
செய்தியாளர் - M. மீரா
மத்திய கிழக்கில் ஏற்கெனவே நீடித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் Camp David பயணம் முன்கூட்டியே முடிவடைந்தது, Camp David அருகே அமெரிக்க போர் விமானம் ஒரு விமானத்தை இடைமறித்து தாக்குதலை நிறுத்தியது. இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டது என அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. இதனுடன், ஈரான் தனது ராணுவத்தை Code 100 என்ற மிக உயர்ந்த எச்சரிக்கை நிலைக்கு கொண்டு வந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் பரவி வருகின்றன. இது குறித்த முழு தகவல்களை இங்கே பார்க்கலாம்.
செப்டம்பர் 19 அன்று ட்ரம்ப் Maryland-ல் உள்ள Camp David அதிபர் ஓய்வு இல்லத்திற்குச் சென்றிருந்தார். ஆனால் திட்டமிட்டிருந்த காலத்தைவிட முன்கூட்டியே அவர் வாஷிங்டனுக்கு திரும்பினார். இதற்கான காரணத்தை வெள்ளை மாளிகை உடனடியாக அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
அதே நாளில், Camp David அருகேயுள்ள தடை செய்யப்பட்ட வான்வழி பகுதிக்குள் ஒரு பொதுவிமானம் நுழைந்ததாகவும், அதை NORAD-ன் F-16 போர் விமானம் இடைமறித்ததாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். விமானியின் கவனத்தை ஈர்க்க F-16 flare-களை பயன்படுத்தி, அந்த விமானத்தை பாதுகாப்பாக தடை செய்யப்பட்ட வான்வெளியிலிருந்து வெளியேற்றியது.
ஆனால், இந்த சம்பவம் ட்ரம்பின் முன்கூட்டிய Washington திரும்புதலுடன் தொடர்புடையது என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆதாரம் இல்லை. அதேபோல், அந்த பொதுவிமானம் அதிபருக்கு நேரடி அச்சுறுத்தலாக இருந்ததாகவும் தகவல்கள் எதுவும் உறுதிபடுத்தப்படவில்லை.
இந்த சம்பவங்களுடன் இணைந்து, மத்திய கிழக்கில் அமெரிக்க தூதரகங்கள் பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளன. குறிப்பாக இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், விமானங்கள் ரத்து செய்யப்படுதல், வான்வெளி மூடப்படுதல் மற்றும் பயணத் தடைகள் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை வெளியான பின்னணியில் சவுதி–ஹவுதி மோதலும் முக்கிய காரணமாக உள்ளது. ரியாத்தை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாக சவுதி தெரிவித்தது. அதனை இடைமறித்ததாகவும் கூறியது. இதற்கிடையே ரியாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் சேமிப்பு பகுதியில் தீ மற்றும் புகை காணப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன.
இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமெரிக்கப் பயணத்திலும் மாற்றம் ஏற்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. UN கூட்டத்துக்காக நியூயார்க் செல்லும் அவரது பயணத்தை குறைத்ததாகவும் எலான் மஸ்க்கை சந்திக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் ஊடகமான Ynet செய்திகள் தெரிவித்தன.
மேலும், ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு இடையே ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் போது சந்திப்பும் தற்போது திட்டமிடப்படவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் Jerusalem Post க்கு தெரிவித்துள்ளார்.
Code 100’ என்றால் என்ன?
இதற்கிடையே சமூக வலைதளங்கள் மற்றும் சில செய்திகளில், ஈரான் “Code 100” என்ற மிக உயர்ந்த ராணுவ எச்சரிக்கை நிலையை செயல்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்தச் செய்தியை கவனமாக அணுக வேண்டும். Code 100 செயல்படுத்தப்பட்டதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்கள் அல்லது நம்பகமான ஆதாரங்கள் உறுதிப்படுத்திய தகவல் தற்போது தெளிவாக இல்லை. Code 100 குறித்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் அதை வைத்து அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீது உடனடி பெரிய ராணுவ நடவடிக்கை தயாராகிறது என்று முடிவு செய்ய முடியாது என தெரிகிறது.