உலகம்

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்னை தீவிரம் - மக்கள் போராட்டம்

Veeramani

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்

இலங்கையில் பொருளாதார சிக்கல் காரணமாக உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசலை இறக்குமதி செய்ய இலங்கையிடம் போதிய அன்னியச்செலாவணி இல்லாததால் அப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. நுவரெலியா அட்டன் பகுதியில் உள்ள எரிபொருள் மையத்தில் டீசல் நிரப்ப மக்கள் நீண்ட வரிசையில் சில மணி நேரங்கள் நின்றிருந்தனர். ஆனால் டீசல் இருப்பு இல்லை என அறிவிக்கப்பட்டதால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில மணி நேரங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் காவல் துறையினர் தலையிட்டு சமரசம் செய்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.



பெரும் பணக்காரர்கள் அதிகவிலை கொடுத்து டீசலை வாங்கி பதுக்கிக்கொள்வதாகவும் இதனால் ஏழை, நடுத்தர மக்களுக்கு அது கிடைக்காத நிலை இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.