இன்ஸ்டாகிராம் வெப் மூலம் விரைவில் மெசேஜ் அனுப்பும் சேவை ஆரம்பமாக உள்ளது.
இன்ஸ்டாகிராம் 2013-ஆம் ஆண்டு நேரடியாக செய்திகளை வழங்கும் முறையை அறிமுகம் செய்தது. அதன்பின் மீண்டும் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் அதே சேவையை தனது வலைத்தளம் மூலம் அறிமுகப்படுத்த உள்ளது.
இன்ஸ்டாகிராம் பயனர்கள் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தின் மூலம் நேரடியாக செய்திகளை அனுப்பவும், பகிரவும் அனுமதிக்கும் ஒரு பயன்பாட்டை சோதனை செய்வதாக ‘தி வெர்ஜ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பயன்பாட்டை உலகெங்கிலும் உள்ள ஒரு சிறிய அளவிலான பயனர்கள் மட்டும் தற்போது பயன்படுத்திக் கொள்ளும் விதமாக சோதனை முறையில் கொண்டுவர உள்ளது. முழுமையான சோதனைக்குப் பிறகு எதிர்காலத்தில் இந்த அம்சத்தை பரந்த பயனர்கள் பயன்படுத்தும் விதத்தில் மாற்றி அமைக்கவும் முடிவு செய்துள்ளது.
வெளியாகி உள்ள தகவலின்படி, இந்தச் சேவை எப்படி இயங்க உள்ளது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இன்ஸ்டா பயனாளர்கள், இன்ஸ்டா வெப் மூலம் மெசேஜ்கள் அனுப்பலாம். வரும் மெசேஜ்களுக்கு பதிலளிக்கலாம். தங்களின் தேவைக்கு தக்க புதிய குழுவைகூட உருவாக்கலாம். சுயவிவரப் பக்கத்திலிருந்து ஒருவருடன் அரட்டை அடிக்கலாம். அவர்களின் தனிப்பட்ட கணினிகளிலிருந்து புகைப்படங்களைப் பகிரலாம் மற்றும் இன்ஸ்டாகிராம் இணையதளத்தின் மூலம் செய்திகளைப் பகிரலாம்.
இன்ஸ்டாகிராம் தனது வலைத்தள சேவையை 2012-இல் மீண்டும் அறிமுகப்படுத்தியது. அப்போது பயனர்கள் தங்களது நியூஸ் ஃபீட் மட்டும் காணும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆகவே பல ஆண்டுகளாக, இந்நிறுவனம் தனது வலைத்தளத்தை மறுவடிவமைப்பு செய்தது. அதன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ படங்களை பார்ப்பது போன்ற சேவைகளில் சில மேம்பாட்டை கொண்டுவந்தது. ஆனாலும் அதன் பயன்பாட்டை பரவலாக்குவதில் சில சிக்கல்கள் இருந்தன. இந்தப் புதிய சோதனை மூலம் விரைவில் இந்தச் சேவையில் பல மாற்றங்கள் வர உள்ளன.