மொஜ்தபா காமேனி web
உலகம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை.. ஈரானில் ஆட்சி அமைப்புக்குள் வெடித்த மோதல்!

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னாள் உச்சத் தலைவர் தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்த அதிபர் மசூத் பெசெஷ்கியனின் உரையின் சில பகுதிகளை அரசுக்குச் சொந்தமான IRIB நீக்கியதைத் தொடர்ந்து, மோதல் எழுந்துள்ளது.

PT WEB

செய்தியாளர் - M. மீரா

ஈரானில் அரிதாகக் காணப்படும் அரசியல் மோதல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வழக்கமாக ஒரே நிலைப்பாட்டில் செயல்படும் ஈரான் அரசும், அந்நாட்டின் அரசு ஒலிபரப்பு நிறுவனமான IRIB-மும், அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆற்றிய உரையை வைத்து நேரடியாக மோதிக்கொண்டுள்ளன. இந்த விவகாரம் தற்போது அரசியல் மட்டுமல்லாமல், ஊடக சுதந்திரம் மற்றும் ஆட்சி அமைப்புக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் பெசெஷ்கியன் பேசிய உரையின் சில முக்கிய பகுதிகளை IRIB ஒளிபரப்புக்கு முன்பே நீக்கியது. இதையடுத்து, ஈரான் அரசின் தகவல் மன்றம் அந்த நடவடிக்கையை censor என்று கடுமையாக விமர்சித்தது.

சர்ச்சைக்கு காரணமான பகுதி என்னவென்றால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி தனிப்பட்ட முறையில் அனுமதி அளித்ததாக பெசெஷ்கியன் கூறியிருந்தார். வெளிப்படையாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், நீண்டகால பதற்றம் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் பாதிக்கிறது என்றும் அதிகாரிகள் எடுத்துரைத்த பிறகு காமேனி அனுமதி வழங்கியதாக அவர் விளக்கியிருந்தார். அவரது உத்தரவின் பேரில்தான் நாங்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்கினோம் என்றும் அவர் கூறியிருந்தார்.

Ali Khamenei

ஆனால், IRIB இந்தக் கருத்தை முழுமையாக ஒளிபரப்பவில்லை. அதற்கு விளக்கம் அளித்த அந்த நிறுவனம், அந்தப் பகுதி ஒளிபரப்பப்பட்டிருந்தால் ஈரானின் உயர்மட்ட தலைமைக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக மக்கள் நினைத்திருப்பார்கள் என்றும், தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்கவே அந்தக் காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.

இது முதல் முறையல்ல என்று ஈரான் அரசு குற்றம்சாட்டியுள்ளது. சமீபத்தில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் மற்றும் நீதித்துறைத் தலைவர் கோலம் ஹொசைன் மொஹ்செனி ஆகியோரின் பேச்சுகளிலும் முக்கிய பகுதிகள் நீக்கப்பட்டதாக அரசு கூறுகிறது. இதற்குப் பின்னால் அரசு தொலைக்காட்சியில் செயல்படும் கடும்போக்குவாத அரசியல் குழுக்கள் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

Mohammad Bagher Ghalibaf & Abbas Araghchi

இந்த விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சியும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க ஊடகங்களான Fox News மற்றும் CNN-க்கு அளித்த தனது பேட்டிகளில் ஈரானின் நிலைப்பாட்டை வலுவாக விளக்கியிருந்தாலும், அவற்றில் மிகக் குறைந்த பகுதிகள் மட்டுமே ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார். வெளிநாடுகளில் ஈரான் மேற்கொள்ளும் ராஜதந்திர முயற்சிகளை அரசு ஊடகம் மக்களிடம் சரியாக எடுத்துச் செல்லவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த சர்ச்சை, உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி நாடு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று சமீபத்தில் அழைப்பு விடுத்துள்ள சூழலில் வெடித்துள்ளது. ஒருபுறம் அரசு, உண்மையை மறைப்பதே தேசிய ஒற்றுமைக்கு பாதிப்பு எனக் கூறுகிறது. மறுபுறம், IRIB, முழு உரையை ஒளிபரப்பினால் தலைமைக்குள் பிளவு இருப்பதாக தவறான எண்ணம் உருவாகும் என்பதால் எடிட்டிங் செய்ததாக வாதிடுகிறது.

இந்த மோதல், ஈரானின் அதிகார மையங்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. அரசு ஊடகங்களின் சுதந்திரம், தகவல் வெளிப்படைத் தன்மை மற்றும் அதிகார சமநிலை குறித்து புதிய விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.