இஸ்ரேல் - ஹமாஸ் முகநூல்
உலகம்

கொல்லப்படும் அப்பாவி பொதுமக்கள்... 'சூப்பர் பவர்' நாடுகள் இனியாவது விழித்துக்கொள்ளுமா..?

இஸ்ரேல் அரசுக்கும், ஹமாஸ் குழுவினருக்குமான இடையேயான போர் இரு பக்கமும் பெரும் சேதாரங்களை ஏற்படுத்திவருகிறது. போர் தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொன்றும் மனதை ரணமாக்குகின்றன.

PT digital Desk

இஸ்ரேலிய மக்கள் சிறிய அளவில் வாழும் கிப்புஸ் பீயர் என்னும் இடத்தில் ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்திய வீடியோக்கள் வெளியாகியிருக்கின்றன. சிறிய அளவிலான மக்களே வாழும் கிப்புஸ் பகுதிதான் ஹமாஸ் குழுவினரின் தாக்குதலின் முதல் பலி என சொல்லப்படுகிறது.

சோதனைச் சாவடிகளை சூறையாடி, வாகனங்களை நிறுத்தி அதிலிருக்கும் பொதுமக்களை எந்தவித கருணையும் இன்றி சுட்டுக்கொண்டிருக்கிறார்கள் ஹமாஸ் படையினர். அப்பாவி பொதுமக்களைக் கொல்லும் அதிகாரத்தை யார் இவர்களுக்கு கொடுத்தார்கள் என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

இது ஒரு பக்கம் எனில், இஸ்ரேலிய அரசும் காஸாவின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது." காஸாவுக்குள் உணவு, நீர், எரிபொருள் என எதையும் கொண்டு செல்வதற்கு அனுமதியில்லை. அவர்கள் மிருகங்கள் . மிருகங்களை எப்படி நடத்த வேண்டுமா அப்படித்தான் அவர்களை நடத்தப்போகிறோம்" என இரு தினங்களுக்கு முன்னர் பகிரங்கமாகவே அறிவித்தார் இஸ்ரேலிய அமைச்சர்.

பாலஸ்தீனியர்கள் ரஃபா வழியில் வெளியேறலாம் என சொல்லிவிட்டு, அந்த வழியையும் குண்டுகள் வீசி தகர்த்து எறிந்திருக்கிறது இஸ்ரேல். அது தொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. காஸாவில் வாழ வழியின்றி தவிக்கும் பாலஸ்தீனியர்கள் இனி வெளியேற வாய்ப்பே இல்லை என்று சொல்லப்படுகிறது.

ரஃபா வழித்தடம்

காஸாவிலிருந்து எகிப்திற்கு செல்வதற்கான ஒரே வழி ரஃபா தான். மற்ற அனைத்து வழிகளையும் இஸ்ரேல் அரசு ஏற்கெனவே மூடிவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று முறை இந்த ரஃபா வழிப்பாதையில் குண்டுகளை வீசியிருக்கிறது இஸ்ரேல் அரசு.

காஸாவில் இருக்கும் மக்கள் வாழும் பகுதிகள், மசூதிகள் என எங்கெல்லாம் பொதுமக்கள் தங்கவைக்கப்படுவார்களோ அந்த இடங்களை இஸ்ரேலிய அரசு டார்கெட் செய்வதாக அல்ஜஸீரா இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 23 லட்ச அப்பாவி பொதுமக்கள் காஸாவில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள்.உலகின் சூப்பர்பவர் தேசங்கள் இஸ்ரேல் ஆதரவு, பாலஸ்தீன ஆதரவு என பிரிந்து கிடக்கிறது. போர் என்னும் பயங்கரவாதத்தில் கொல்லப்படுவது அப்பாவி பொதுமக்கள் தான் என்பதை இவர்கள் இனியாவது சிந்தித்துப் பார்த்தல் நலம். இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் துயரத்தை உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன.