Volcano Reuters
உலகம்

கொப்பளித்து வெடிக்கும் எரிமலை.. 2018-ம் ஆண்டு சுனாமி மீண்டுமா? பீதியில் இந்தோனேசியா!

2018-ல் அனக் கிரகடோவா எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஜாவா, சுமத்ராவை தாக்கிய சுனாமியில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே எரிமலை மீண்டும் உக்கிரம் காட்டியுள்ளது.

PT WEB

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

இந்தோனேசியாவின் அனக் கிரகடோவா எரிமலை வெடித்து வெளியான சாம்பல், ஜாவா தீவு பகுதியில் சுமார் 20,000 அடி உயரம் வரையும், சுமத்ரா தீவு பகுதியில் எரிமலைப் புகை மற்றும் சாம்பல் கலந்த மேகம் சுமார் 50,000 அடி உயரம் வரையும் மேலெழுந்ததாக இந்தோனேசிய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

Volcano

ஜகார்த்தாவின் முக்கிய விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான விமானங்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சர்வதேச விமானங்கள் உட்பட 209 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதாக இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. பள்ளிகளின் செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. சாம்பல் விழும் பகுதிகளில் முகக்கவசம் மற்றும் கண் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தவும், வெளியில் செல்வதை குறைக்கவும், குடிநீர் உள்ளிட்ட நீராதாரங்களை மூடி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் சாம்பல் படிவதால் பார்வைத்திறன் குறையக்கூடும் என்பதால் வாகனங்களை கவனமாக இயக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Volcano

எனினும், எரிமலை வெடிப்பால் உடனடியாக சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. 2018-ம் ஆண்டு அனக் கிரகடோவா வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

‘கிரகடோவாவின் குழந்தை’ என்று பொருள்படும் அனக் கிரகடோவா, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. 1883-ஆம் ஆண்டு மிகப்பெரிய எரிமலை வெடிப்பில் அழிந்த கிரகடோவா எரிமலை இருந்த அதே பகுதியில் இது உருவானது.அந்த வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமிகளில் 36,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.