இந்தோனேசியாவில் குமுறும் சினாபங் எரிமலையில் இருந்து சாம்பல்கள் வெளியேறி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் ஏராளமான தீவுகள் உள்ளன. இங்கு பல தீவுகளில் எரிமலைகள் இருக்கின்றன. நவம்பர் மாதம் ஆகங் என்ற எரிமலை வெடிக்கத் தொடங்கியதை அடுத்து 2300 அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறி எழுந்தது. அந்தப் பகுதியில் வசித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். எரிமலை சீற்றம் காரணமாக பாலி தீவில் உள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சினாபங் எரிமலையில் இருந்து இப்போது சாம்பல்கள் வெளியேறி வருகின்றன. இதைத் தொடர்ந்து சுமத்ரா தீவு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரு ஆண்டுகளுக்கு முன் சினாபங் எரிமலை வெடித்ததில் 6 பேர் உயிரிழந்ததால், இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து ஆயிரக்ணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது எரிமலையில் இருந்து வெளியேறி வரும் சாம்பல்களால், சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.