உலகம்

லிவ்-இன், திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவுக்கு தடை? - சட்டமியற்ற முனையும் அரசு.. எங்கு?

JananiGovindhan

திருமணத்துக்கு முன் இல்லற உறவில் ஈடுபட்டால் கிரிமினல் குற்றமாக கருதப்பட்ட ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என இந்தோனேஷியா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

கடந்த 2019ம் ஆண்டு இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் இது குறித்தான சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில், லிவ்-இன், திருமணத்தை மீறிய பாலியல் வாழ்க்கை, திருமணத்துக்கு முன்பு பாலியல் உறவு கொள்வது போன்றவற்றுக்கு தடை விதிக்கும் விதமாக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

ஆனால் அரசின் இந்த புது சட்டத்திருத்தத்துக்கு இந்தோனேஷிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, போராட்டங்களையும் முன்னெடுக்கச் செய்தது. மக்கள் தரப்பில் எதிர்ப்பு இருந்ததால் அப்போது இந்த சட்டத் திருத்தத்தை இந்தோனேஷிய அரசு கிடப்பில் போட்டது.

இந்த நிலையில், தற்போது அதனை சட்ட மசோதாவாக்கும் முனைப்பில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. இது எதிர்வரும் 15ம் தேதி நிறைவேற்றப்படும் எனவும் அந்நாட்டு நிதியமைச்சர் எட்வர்ட் உமர் ஷெரீஃப் ஹியாரிஜ் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் லிவ்-இன், திருமணத்தை மீறிய, திருமணத்துக்கு முன்பு பாலியல் உறவு கொள்வோரை புதிய குற்றவியல் குறியீட்டின்கீழ் வழக்குப்பதிந்து ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட கணவன், மனைவி மற்றும் லிவ் இன் முறையை எதிர்க்கும் பெற்றோர் புகார் கொடுக்க முழு உரிமை வழங்கப்படும் என்றும், பாலியல் உறவு தொடர்பான இந்த சட்டம் இந்தோனேஷிய குடிமக்களுக்கு மட்டுமல்லாமல் அங்கு சுற்றுலாவுக்கு செல்லும் பயணிகளுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.