உலகம்

இந்தோனேஷியாவில் நிலச்சரிவு : தங்க சுரங்கத்தில் 60 பேர் புதைந்தனர்

இந்தோனேஷியாவில் நிலச்சரிவு : தங்க சுரங்கத்தில் 60 பேர் புதைந்தனர்

webteam

இந்தோனேஷியாவில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 60 பேர் மண்ணில் புதைந்தனர். 

இந்தோனேஷியா வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள போலாங் மோங்கோண்டோவ் பகுதியில் அனுமதியின்றி தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று திடீரென தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் வேலை பார்த்து கொண்டிருந்த பணியாளர்கள் 60 பேர் மண்ணில் புதைந்தனர்.

இதையடுத்து தகவலறிந்து வந்த மீட்பு படையினரும் அப்பகுதி மக்களும் புதைந்தவர்களை தொடர்ந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மீட்பு படையினர் கூறுகையில், நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடி வருவதாகவும் மீட்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் காலை 5 மணி நிலவரப்படி ஒருவர் இறந்துள்ளதாகவும் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைய பேர் தங்க சுரங்கத்தில் இருந்தபோது திடீரென விட்டங்கள் முறிந்து விழுந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என மீட்புபடையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

இந்தோனேஷியா அரசாங்கம் இத்தகைய சிறு அளவிலான தங்க சுரங்கங்களை தடை செய்திருக்கிறது. இருப்பினும் தொலைதூர பகுதிகளில் உள்ள சுரங்கங்களை அதிகாரிகள் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் இருப்பதாலேயே இதுப்போன்ற விபத்துகள் அதிகம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.