BOAT ACCIDENT  ANI
உலகம்

நடுக்கடலில் கொந்தளித்த அலை.. தலைகுப்புற கவிழ்ந்த பயணிகள் கப்பல்.. 243 பேரின் நிலை என்ன?

243 பேருடன் சென்ற பயணிகள் கப்பல், நடுக்கடலில் சிக்கி தலைகுப்புற கவிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கப்பலில் இருந்தவர்களில் சிலர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகியிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

இந்தோனேசியாவின் East Java மாகாணத்தில் உள்ள Surabaya நகரில் இருந்து South Kalimantan மாகாணத்தில் உள்ள Banjarmasin நகரை நோக்கி Virgo Transport 8 என்ற பயணிகள் கப்பல், கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி புறப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் 213 பயணிகள் மற்றும் 30 பணியாளர்கள் என மொத்தம் 243 பேர் பயணித்துள்ளனர். Java Sea பகுதியில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோசமான வானிலை ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் பலத்த காற்று மற்றும் ராட்சத அலைகளால் கடல் சீற்றமாக இருந்துள்ளது.

BOAT

இதன் காரணமாக கப்பலை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கப்பலை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக கேப்டன் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே, நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் கப்பல் சாய்ந்து கொண்டிருப்பதாக கடைசி தகவல் கிடைத்துள்ளது. அதன் பின்னர் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, Banjarmasin Search and Rescue Agency-க்கு அதிகாலை 4.10 மணியளவில் கப்பல் கடலில் கவிழ்ந்துவிட்டதாக தகவல் கிடைத்ததும், மீட்புப் படையினர் உடனடியாக தேடுதல் பணியைத் தொடங்கியுள்ளனர்.

கடலில் கப்பலை தேடும் பணியில் கடற்படை கப்பல்கள், மீட்புக் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேடுதல் பணியின்போது, கப்பல் கடலில் தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடுமையான அலைகள் கப்பலின் ஒரு பக்கத்தில் மோதியதால் கப்பல் சாய்ந்து, பின்னர் கவிழ்ந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, முதற்கட்டமாக கப்பலில் இருந்த 108 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOAT ACCIDENT

ஆனால், கப்பலில் பயணித்த மீதமுள்ள 129 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து 600-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள், 12 கப்பல்கள் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடல் தொடர்ந்து சீற்றமாக இருப்பதால், மீட்புப் பணியில் பல்வேறு சவால்கள் ஏற்பட்டுள்ளன. 243 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன 129 பேரையும் உயிருடன் மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.