உலகம்

இந்தோனேசியா விமான விபத்து: கண்டுபிடிக்கப்பட்ட சில பொருட்கள்... உடல்களை தேடும்பணி தீவிரம்!

webteam

இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே காணாமல் போன பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான பகுதியை அந்நாட்டு கடற்படை கண்டுபிடித்துள்ளது.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து மேற்கு கலிமாந்தன் மாகாண தலைநகரான போன்டியாநாக் என்ற இடத்தை நோக்கி புறப்பட்ட போயிங் 737 ரக விமானம், நான்கு நிமிடங்களில் 10 ஆயிரம் அடி உயரத்தை எட்டியது. அப்போது திடீரென கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்த விமானம் ரேடாரின் பார்வையிலிருந்து மறைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஸ்ரீவிஜயா என்ற நிறுவனத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் ஐந்து குழந்தைகள், ஒரு பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதை உறுதி செய்த கடற்படை, விமான பாகங்களை தேடிவந்தது. இந்நிலையில், வடக்கு ஜகார்த்தாவில் உள்ள தீவுப்பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கூறும் போது, “ இடி விழுவது போன்ற சத்தம் கேட்டது. தண்ணீரில் விழுந்த விமானம் வெடித்து அதன் சிறு பாகம் எங்களின் கப்பல் மீது விழுந்தது.”என்றார்.

இது குறித்து ஜகார்த்தா போலீசார் கூறும் போது, “இரண்டு பேக்குகளை கண்டறிந்துள்ளோம். ஒரு பேக்கானது விமானத்தில் பயணித்த பயணியுடையது. அதில் பயணியின் பொருட்கள் இருந்தன. மற்றொரு பேக்கில் விமானம் சம்பந்தமான பாகங்கள் இருந்தன. 4 விமானங்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடல்களை தேடும் பணியும் தொடர்கிறது” என்றார்.