இந்தோனேசியா ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது. இது, அந்நாட்டில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் நாணயமான 'ரூபியா', அமெரிக்க டாலருக்கு நிகராக வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபியாவின் மதிப்பு 16,985ஆகக் குறைந்தது. 2025ஆம் ஆண்டில் 3.5% சரிந்து கடைசியாக 16,965ஆக இருந்த நாணயத்தின் மதிப்பு, ஜனவரி மாதத்தில் கிட்டத்தட்ட 2% குறைந்துள்ளது. 10 ஆண்டு இந்தோனேசிய அரசாங்க பத்திரமான ID10YT=RR இன் வருமானம் 3.3 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.33% ஆக இருந்தது, இது மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, தனது மருமகனான தாமஸ் டிஜிவாண்டோனோவை அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் குழுவில் ஒருவராகப் பரிந்துரைத்துள்ளார். இந்த நடவடிக்கை மத்திய வங்கியின் சுதந்திரமான செயல்பாட்டில் தலையிடுவதாக முதலீட்டாளர்கள் கருதுவதால், சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2029ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8 விழுக்காடாக உயர்த்த அதிபர் பிரபோவோ இலக்கு வைத்துள்ள நிலையில், இந்த அரசியல் தலையீடுகள் முதலீட்டாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.