model image x page
உலகம்

ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியல்.. இந்தியாவுக்கு எந்த இடம்? ஊழல் குறைந்த நாடு எது?

2024-ஆம் ஆண்டுக்கான மிகவும் ஊழல் நிறைந்த நாடுகளின் கண்ணோட்ட குறியீடு தரவரிசைப் பட்டியலில் மீண்டும் டென்மார்க்கே முதலிடத்தில் உள்ளது.

Prakash J

சர்வதேச வெளிப்படைத்தன்மை என்ற தன்னாா்வ அமைப்பு, மிகவும் ஊழல் நிறைந்த நாடுகளின் கண்ணோட்ட குறியீடு பட்டியலை வெளியிட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் நடைபெறும் ஊழல் உள்பட 13 தரவுகளின்படி பூஜ்ஜியம் முதல் 100 மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறது. இதில், ஊழல் மிகுந்த நாடு என்றால் பூஜ்ஜியம் மதிப்பெண்ணும், ஊழல் அற்ற நாடு என்றால் 100 மதிப்பெண் என்ற அடிப்படையில் நாடுகள் தரவரிசைப் படுத்தப்படுகின்றன.

அதன்படி, 180 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில், ஊழல் குறைந்த முதல் 10 நாடுகளில் டென்மார்க் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து பின்லாந்து, சிங்கப்பூர், நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

அதேநேரத்தில் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் தெற்கு சூடான் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் சோமாலியா, வெனிசூலா, சிரியா, ஏமன், லிபியா, ஈகுவடோரியல், கினியா, நிகரகுவா, சூடான் ஆகிய நாடுகள் உள்ளன.

இந்தியா

இந்தப் பட்டியலில் இந்தியா 96வது இடத்தைப் பெற்றுள்ளது. 2023ஆம் ஆண்டு 39 மதிப்பெண் பெற்று 93ஆவது இடத்தைப் பெற்ற இந்தியா, கடந்த ஆண்டு 38 மதிப்பெண் பெற்று 96ஆம் இடத்துக்குப் பின்தங்கியுள்ளது. தெற்காசியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தான் 135ஆவது இடத்திலும், இலங்கை 121ஆவது இடத்திலும், வங்கதேசம் 149ஆவது இடத்திலும், சீனா 76ஆவது இடத்திலும் உள்ளன.

அமெரிக்கா 28 ஆவது இடத்திலும், பிரான்ஸ் 25ஆவது இடத்திலும், ஜெர்மனி 15ஆவது இடத்திலும், ரஷ்யா 22வது இடத்திலும், மெக்சிகோ 26வது இடத்திலும் உள்ளன. 2012 முதல் 32 நாடுகள் தங்கள் ஊழல் அளவைக் கணிசமாகக் குறைத்திருந்தாலும், அதே காலகட்டத்தில் 148 நாடுகள் தேக்க நிலையில் அல்லது மோசமாகி இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.