மெக்ஸிகோவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
மெக்ஸிகோவில் 7.1 ரிக்டர் அளவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாயின. இந்த இடிபாடுகளில் சிக்கி 21 பள்ளி குழந்தைகள் உட்பட 225-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், மெக்ஸிகோவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை என்றும், அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக, மெக்ஸிகோவுக்கான இந்திய தூதரை தொடர்புகொண்டு பேசியதாக சுஷ்மா பதிவிட்டுள்ளார்.