indian tourist spit gutka in nepal web
உலகம்

'இது ஒண்ணும் இந்தியா கிடையாது..' சாலையில் குட்காவை துப்பிய இந்தியர்கள்.. நேபாள இளைஞர் செய்த செயல்!

பொதுவெளியில் துப்பிய இந்தியர்களுக்கு எதிராக நேபாள இளைஞர் செய்த செயல் இணையத்தில் வைரலானது..

PT WEB

நேபாளத்தின் முக்திநாத்–பொக்காரா சாலையில் காரில் வந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் குட்கா மென்று சாலையில் துப்பியதால், உள்ளூர் நேபாள இளைஞர் வாகனத்தை நிறுத்தி “இது இந்தியா கிடையாது, நேபாளம்” என்று கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.

செய்தியாளர் - இனியா

நேபாள மாநிலம் முக்திநாத் (Muktinath) மற்றும் பொக்காராவுக்கு (Pokhara) இடைப்பட்ட சாலையில், இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சிலர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது காரில் இருந்த சிலர், குட்காவை (Gutka) மென்று பொதுச் சாலையிலேயே துப்பியுள்ளார்கள். இதனைத் தற்செயலாகக் கவனித்த அந்தப் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் நேபாள இளைஞர் ஒருவர், உடனடியாக அந்தப் பயணிகளின் வாகனத்தை மறித்து நிறுத்தினார்.

அந்தப் பயணிகளிடம் பேசிய இளைஞர், "இது இந்தியா கிடையாது சகோதரா, இது நேபாளம்" என்று கூறி தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். மேலும், "இவ்வளவு பெரிய நாட்டிலிருந்து வந்துவிட்டு இங்கே இப்படிச் செய்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பிய அவர், துப்பிய அந்த இடத்தை உடனடியாகத் தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும் என்று எச்சரித்தார்.

இதனால் மிகுந்த சங்கடத்திற்குள்ளான அந்தச் சுற்றுலாப் பயணிகள், செய்த தவறுக்காகப் பலமுறை மன்னிப்புக் கோரினர். இருப்பினும் அந்த இளைஞர் சமாதானம் அடையாமல், அசுத்தம் செய்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார். இதனைத் தொடர்ந்து, வேறு வழியின்றி அந்தச் சுற்றுலாப் பயணிகள் காரிலிருந்து இறங்கி, தாங்களே தண்ணீர் ஊற்றி அந்தச் சாலையைச் சுத்தம் செய்தனர்.

இந்தக் காணொளி தற்போது இணையத்தில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஒரு சிலர் செய்யும் இத்தகைய பொறுப்பற்ற தவறுகளால் தான், ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் சர்வதேச அளவில் அவப்பெயர் ஏற்படுகிறது என நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதங்கத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.