ஹர்ஷவர்தன், சுவேதம் x page
உலகம்

அமெரிக்கா | தொடரும் மரணங்கள்.. இந்திய தொழிலதிபர் செய்த கொடூரம்! பறிபோன 3 உயிர்கள்!

இந்திய தொழிலதிபர் ஒருவரே தன் மனைவியையும் குழந்தையையும் சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் கடந்த ஆண்டில் மட்டும் தொடர் கதையாக இருந்தது. பின்னர், கடந்த சில மாதங்களாக இது குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அரங்கேறி வருகிறது. அதிலும் இந்திய தொழிலதிபர் ஒருவரே தன் மனைவியையும் குழந்தையையும் சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகாவைச் சேர்ந்தவர் ஹர்ஷவர்தன் எஸ். கிக்கேரி (57). மைசூருவை தலைமையிடமாகக் கொண்ட ரோபாட்டிக்ஸ் நிறுவனமான ஹோலோவேர்ல்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். இவரது மனைவி சுவேதா பன்யம் (44). இவர், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருந்தனர். ஹர்ஷ்வர்தன் அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர், 2017ஆம் ஆண்டு ஹர்ஷ்வர்தன் மனைவியுடன் சேர்ந்து ஹாலோ வால்ட் என்ற ரோபோர்ட்டிக் நிறுவனத்தை தொடங்கினார்.

ஹர்ஷவர்தன்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் நியூகேஸ்டல் இந்நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. ஹர்ஷ்வர்தன் குடும்பத்துடன் நியூகேஸ்டல் பகுதியில் வசித்து வந்தார். கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, அந்த நிறுவனம் 2022இல் மூடப்பட்டது. இதையடுத்து அத்தம்பதி, அமெரிக்காவிற்கு மீண்டும் திரும்பினர். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி ஹர்ஷ்வர்தன் தனது வீட்டில் மனைவி சுவேதா மற்றும் மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்னர், தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். ஒரு மகன் வெளியே சென்றிருந்த நிலையில் மற்றொரு மகனையும், மனைவியையும் ஹர்ஷ்வர்தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, தன்னுடைய தொழில் நிறுவனத்தில் ஹர்ஷவர்தன் பிரபலமாக விளங்கியபோது, எல்லைப் பாதுகாப்பிற்கு ரோபோக்களைப் பயன்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.