அமெரிக்காவில் 31 ஆண்டுகளாக வசித்து வரும் இந்திய வம்சாவளி பெண், கிரீன் கார்டு நேர்காணலின்போது தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.
அமெரிக்காவுக்குச் சென்று வேலை பார்ப்பது பலருடைய கனவாக இருக்கிறது. ஆனால், அந்தக் கனவு பலருக்கும் எட்டாக்கனியாகவே உள்ளது. அதிலும் இரண்டாவது முறை பதவியேற்ற ட்ரம்ப், அந்தக் கனவுகளுக்கு எல்லாம் கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக, குறிப்பிட்ட துறையில், திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே தற்காலிகமாக அனுமதிக்கப்படும் H1B விசாக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளார்.
தவிர, அதுதொடர்பான விதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெச்1பி விசாவில் அமெரிக்காவுக்கு வரக்கூடியவர்களின் பின்புலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால், தற்போது இந்திய விண்ணப்பங்களுக்கான நேர்காணல்கள்கூட அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் பெருமளவில் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். இந்த நிலையில், அமெரிக்காவில் 31 ஆண்டுகளாக வசித்து வரும் இந்திய வம்சாவளி பெண், கிரீன் கார்டு நேர்காணலின்போது தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.
அமெரிக்காவில் 1994ஆம் ஆண்டு முதல் வசித்துவரும் 60 வயதான பப்ளேஜித் 'பப்ளி' கவுர் என்ற இந்திய வம்சாவளிப் பெண், நிலுவையில் உள்ள கிரீன் கார்டு விசாவுக்கு விண்ணப்பத்திருந்தார். அதாவது, அமெரிக்காவில் நிரந்தர வசிப்பிடத்திற்குத் தேவையான கிரீன் கார்டு பெறுவதற்கான இறுதிப்படியான பயோமெட்ரிக் ஸ்கேன் சோதனைக்குச் சென்றபோது ஐசிஇ முகவர்களால் தடுத்துவைக்கப்பட்டதாக உள்நாட்டு செய்தித்தாள் ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. அவர், தடுத்து வைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை எந்த பதிலும் அளிக்கவில்லை.
அதேநேரத்தில், அவரது கிரீன் கார்டு மனு ஏற்கெனவே அவரது அமெரிக்க குடிமகன் மகள் மற்றும் மருமகனால் ஸ்பான்சர்ஷிப் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1994ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து முதலில் லகுனா கடற்கரையில் குடியேறிய கவுருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர், தனது கணவருடன் இணைந்து லாங் பீச்சில் உணவு நடத்தி வந்ததாகவும், பின்னர் சமீபகாலமாக கவுர் ராயல் இந்தியன் கறி ஹவுஸின் உரிமையாளருடன் பணிபுரிந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் கைது செய்யப்பட்டு தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டிருக்கும் அவரை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.