அருள் காரசாலா எக்ஸ் தளம்
உலகம்

அமெரிக்கா | தொடரும் மரணங்கள்.. இந்திய வம்சாவளி பாதிரியார் சுட்டுக் கொலை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் கடந்த ஆண்டில் மட்டும் தொடர் கதையாக இருந்தது. பின்னர், கடந்த சில மாதங்களாக இது குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அரங்கேறி வருகிறது. அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம் செனிகா நகரில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருள் காரசாலா என்பவர் பாதிரியாராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஆலய நிர்வாக அலுவலகத்தில் அவரை சந்திக்க, கேரி ஹெர்மேஷ் (வயது 66) என்பவர் சென்றிருந்தார். அவர்கள் பேசியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கேரி திடீரென பாதிரியாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார். படுகாயம் அடைந்த காரசாலாவை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதற்கிடையே, அங்கு விரைந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய கேரி ஹெர்மேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

காரசாலா

எனினும், துப்பாக்கிச்சூடு காரணம் குறித்து எதுவும் அவர்கள் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் பாதிரியாரின் மரணம், சுமார் 2,100 பேர் வசிக்கும் செனிகா நகர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரசாலா, 2011 முதல் செயிண்ட்ஸ் பீட்டர் மற்றும் பால் கத்தோலிக்க தேவாலயத்தில் போதகராக பணியாற்றி வந்தார் என்று திருச்சபை வலைத்தளத்தில் அவரது சுயவிவரம் தெரிவிக்கிறது. காரசாலா 1994ஆம் ஆண்டு தனது சொந்த நாடான இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள கடப்பா மறைமாவட்டத்திற்கு பாதிரியாராக நியமிக்கப்பட்டார். பேராயர் ஜேம்ஸ் பி.கெலேஹரால் பார்வையிட அழைக்கப்பட்ட பின்னர், 2004 முதல் கன்சாஸில், ஐந்து கன்சாஸ் திருச்சபைகளின் போதகராகவும் பணியாற்றினார். காரசாலா 2011இல் அமெரிக்க குடிமகன் ஆனார். அதேநேரத்தில் இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன் என்ற அந்தஸ்தையும் தக்க வைத்துக் கொண்டார்.

முன்னதாக, கடந்த மார்ச் மாத இறுதியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது 24 வயது மகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.