இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப நிர்வாகி அரவிந்த் கிருஷ்ணா(57) உலகின் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம்மின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎம் இயக்குநர்கள் குழுவினர் அரவிந்த் கிருஷ்ணாவை அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்ந்தெடுத்துள்ளனர். ஐபிஎம்மின் கிளவுட் மற்றும் அறிவாற்றல் மென்பொருளுக்கான மூத்த துணைத்தலைவராக பதவி வகித்து வந்தார் அரவிந்த் கிருஷ்ணா. 57 வயதான இவர் கான்பூர் ஐஐடியில் இளங்கலை படித்தவர். பின்னர் அர்பானா-சாம்பேனில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் பிஹெச்டி முடித்தார். 1990-ம் ஆண்டு ஐபிஎம்ல் சேர்ந்தார்.
இது குறித்து தெரிவித்துள்ள அரவிந்த் கிருஷ்ணா, “ ஐபிஎம்மின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், நிறுவனம் என்னுள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு கடமைப்பட்டுள்ளேன். உலக அளவில் உள்ள ஐபிஎம் ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கிருஷ்ணா குறித்து பேசிய முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரொமெட்டி, ஐபிஎம் நிறுவனத்தை அடுத்த நிலைக்கு உயர்த்த சரியான நபர் அரவிந்த் கிருஷ்ணாதான் என பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஐபிஎம்மின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அரவிந்த் கிருஷ்ணாவுக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். இந்திய வம்சாவளி ஒருவர் உலக அளவிலான பெரிய நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பது பெருமையான தருணம் என பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.