சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்திய பணக்காரர்களின் பெருமளவான பணம் சேமிப்பு செய்யப்பட்ட வருகிறது. இது, இந்தியாவில் கறுப்புப் பணம் எனக் கூறப்பட்டாலும், சுவீஸ் வங்கிகள் அதை சட்டப்பூர்வ சொத்தாகவே கணக்கிடுகின்றன. எனினும், அவர்கள் பற்றிய விவரங்களை சுவீஸ் வங்கிகள் வெளியிடுவதில்லை.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தங்கள் நாட்டு வங்கிகளில் இருப்பு டெபாசிட் செய்யப்பட்டிருந்த இந்தியர்களின் பணம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த வகையில், சுவீஸ் வங்கிகளில் இந்திய டெபாசிட் கடந்த ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்து, ரூ.37,600 கோடி அளவுக்கு உள்ளது. எனினும், இதில் பெரும்பாலான தொகை, வங்கிகள், நிதி நிறுவனங்களின் கணக்குகளிலேயே வந்திருப்பதாக சுவீஸ் நேஷனல் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் மொத்தம் 3534.54 மில்லியன் சுவீஸ் பிராங்குகள், சுவீஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக SNB தெரிவித்துள்ளது. இதில் 3.02 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் வங்கிகளிலும், 346 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் தனிப்பட்ட கணக்குகளிலும், 41 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அறக்கட்டளைகளிலும், 135 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் பத்திரங்கள் மற்றும் பத்திரங்களிலும் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளன.
இதில், தனிநபர் டெபாசிட் வெறும் 11 சதவீதம் அளவுக்கே அதிகரித்து இருக்கிறது. அதாவது, சுமார் ரூ.3,675 கோடி அளவுக்குத்தான் தனிநபர் பணமாக உள்ளது. இது மொத்த பணத்தில் 10-இல் ஒரு பங்காகும். சுவீஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் இந்த அளவு அதிகரித்து இருப்பது கடந்த 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல்முறையாகும். அந்த ஆண்டில் 3.83 பில்லியன் சுவீஸ் பிராங்க் அளவுக்கு இந்தியர்களின் பணம் இருந்தது. சுவீஸ் வங்கிகளில் 2011, 2017, 2020, 2022 மற்றும் 2023 ஆகிய சில ஆண்டுகளில் மட்டும் இந்தியர்களின் பணம் சிறிது ஏற்றம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த 2006-இல் 6.5 பில்லியன் சுவிஸ் பிராங்க் அளவுக்கு இந்தியர்களின் பணம் இருந்தது. பின்னர் இது படிப்படியாக சரிவடைந்தது.
சுவீஸ் வங்கிகளில், அதிக தொகை வைத்துள்ள நாடுகள் வரிசையில், பிரிட்டன் முதலிடத்தில் உள்ளது. இது, 222 பில்லியன் சுவிஸ் பிராங்குகளை டெபாசிட் செய்துள்ளது. அமெரிக்கா 89 பில்லியன் பிராங்குகளுடன் இரண்டாவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் 68 பில்லியன் டாலர்களூடன் மூன்றாம் இடமும் வகிக்கின்றன. ஜெர்மனி, பிரான்ஸ், ஹாங்காங், லக்ஸம்பர்க், சிங்கப்பூர், யுஏஇ. ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தின் அடிப்படையில் இந்தியா கடந்த ஆண்டு 67வது இடத்தில் இருந்து 48வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.