கனடா முகநூல்
உலகம்

கனடா| திடீரென நடந்த கத்திக்குத்து... பரிதாபமாக மரணமடைந்த இந்தியர்!

இந்த சம்பவத்தை கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் உறுதிசெய்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

கனடாவில் ஒட்டாவா இடத்தில் நடைப்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இந்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் உறுதிசெய்துள்ளது.

கனடாவில் ஒட்டாவா அருகே உள்ள ராக்லேண்ட் என்ற இடத்தில் திடீரென ஏற்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் இந்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். எதற்கான தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் கண்டறியப்படவில்லை.

இந்த சம்பவத்தினை கனடாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

இது குறித்து கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , "ஒட்டாவா அருகே ராக்லேண்டில் கத்தியால் குத்தப்பட்டு இந்தியர் ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இறந்தவரின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதர உள்ளூர் அமைப்புகளோடு நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளது.

மேற்கூறிய சம்பவம் வெள்ளிக்கிழமை (உள்ளூர் நேரப்படி) பிற்பகல் 3 மணிக்கு சற்று முன்பு, ஒட்டாவாவின் மையப்பகுதியிலிருந்து கிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாலோண்டே தெருவுக்கு அருகில் நடந்ததாக ஒன்ராறியோ மாகாண காவல்துறை ரேடியோ-கனடாவிடம் தெரிவித்ததாக அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.

மரணத்திற்கான காரணத்தையோ அல்லது கைது செய்யப்பட்டிருக்கும் நபர் இதற்கு முன்பு ஏதேனும் குற்றம் செய்திருக்கிறாரா என்பது குறித்தான தகவல்களை போலீசார் இன்னும் வெளியிடவில்லை என்று சிபிசி செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.