இளம் பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக இந்திய வாலிபருக்கு லண்டன் நீதிமன்றம் 29 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்தவர் ரோகித் சர்மா. லண்டனில் வசித்து வருகிறார். இவர் கடந்த 18 மாதத்துக்கு முன் ஒரு கடையில் இளம் பெண் ஒருவரைச் சந்தித்தார். அப்போதிருந்து அந்தப் பெண்ணை பின் தொடர்வதை வேலையாகச் செய்து வந்துள்ளார். அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியும் உள்ளார். இதையடுத்து அந்தப் பெண் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரை விசாரித்த புலனாய்வு அதிகாரி நிகோலா கெர்ரி கூறும்போது, ‘’அந்த பெண் 2017 ஆம் ஆண்டு கடை ஒன்றில் வேலை பார்த்தார். அப் போது அவரிடம் பேசியுள்ளார் சர்மா. அன்று மாலையே தனது தந்தையுடன் வந்த சர்மா, அந்த பெண்ணிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். நான்கு நாட்களுக்குப் பிறகு அந்த பெண், வேலையை மாற்றிவிட்டார். அவரை தேடிக் கண்டு பிடித்து, அவர் போன் நம்பரை எப்படியோ பெற்றுள்ளார். பிறகு மெசேஜ்களாக அனுப்பி தொந்தரவு செய்துள்ளார்.
தினமும் 40 முறை ஃபோன் செய்துள்ளார். 15 வெவ்வேறு எண்களில் இருந்து அவர் அழைத்துள்ளார். சர்மாவின் தொல்லை தாங்காமல் மற்றொ ரு வேலைக்கு மாறியிருக்கிறார் அந்தப் பெண். அந்த இடத்தையும் கண்டுபிடித்து தொல்லைக் கொடுத்துள்ளார்’’ என்றார்.
இதையடுத்து கடந்த மாதம் 30 ஆம் தேதி சர்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நடந்து வந்தது. புதன்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பில் சர்மாவுக்கு 29 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.