Fly dubai Reuters
உலகம்

நடுவானில் கத்திக்குத்து.. காயத்துடன் 180 பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி.. யார் இவர்?

இதற்கிடையே, கத்தியால் குத்தப்பட்டுப் பலத்த காயமடைந்த நிலையிலும், மனவுறுதியுடன் சண்டையிட்டு விமானத்தின் கட்டுப்பாட்டை மீட்ட இந்திய விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Prakash J

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃப்ளைதுபாய் (Flydubai - FZ1073) விமானத்தில் நடுவானில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காயம்பட்ட இந்திய விமானி 180 பயணிகளை மீட்ட விஷயம் பேசுபொருளாகி உள்ளது.

துபாயில் இருந்து Flydubai FZ1073 என்ற Boeing 737 விமானம் துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்டது. அந்த விமானத்தில் 180-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் அரபு மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது. இந்த நிலையில், ஜோர்டான் வான்வெளியில் சென்றுகொண்டிருந்தபோது, அவ்விமானம் திடீரென தனது பாதையை மாற்றி சவூதி அரேபியாவை நோக்கித் திரும்பியது. அதே நேரத்தில் விமானத்தில் இருந்து அடுத்தடுத்து அவசரநிலை சிக்னல்கள் அனுப்பப்பட்டன. இதற்கிடையே விமானம் 14 ஆயிரம் அடி கீழே சரிந்த நிலையில், பயணிகள் அனைவரும் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து, விமானம் திடீரென நடுவானில் கடும் தடுமாற்றத்துடன் பறந்துள்ளது.

இதைப் பார்த்த பயணிகளில் சிலர் அவ்வறைக்குள் நுழைந்து அதைப் பாதுகாப்பாய் இறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பாதுகாப்பாக சவூதியில் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், இவ்விமானம் நடுவானில் பரபரப்புக்குள்ளான சம்பவத்தில் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இஸ்ரேல் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்த விமானத்தைக் கீழே வீழ்த்தி விபத்துக்குள்ளாக்க முயற்சி நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளிடமும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் தலைமை விமானியாக இந்தியாவைச் சேர்ந்த ஸ்மித் மச்சார் என்பவர் விமானத்தை இயக்கியுள்ளார். துணை விமானியாக ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் இருந்துள்ளர். இந்த துணை விமானி, அந்த விமானத்தில் விபத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. அதை இந்திய விமானி தடுத்துள்ளார். அப்போது, அவரை துணை விமானி கத்தியால் குத்தியுள்ளார்.

இதனாலேயே விமானத்தில் பதற்றம் நிலவியதாகவும், அதனாலேயே அது கீழே சரிந்ததாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த பயணிகளில் சிலர் போய் விமானத்தை மீட்டு இறக்கியுள்ளனர். இதன் காரணமாகவே நடுவானில் விமானத்தில் பரபரப்பு நிலவியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை சூடுபிடித்துள்ளது. அதன்படி, விமானத்தை மோதச் செய்ய முயன்றதாகக் கூறப்படும் ஓமன் துணை விமானிக்கு இஸ்ரேலுக்குப் பறக்க எப்படி அனுமதி வழங்கப்பட்டது என ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே, கத்தியால் குத்தப்பட்டுப் பலத்த காயமடைந்த நிலையிலும், மனவுறுதியுடன் சண்டையிட்டு விமானத்தின் கட்டுப்பாட்டை மீட்ட இந்திய விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

யார் இந்த ஸ்மித் மச்சார்

குஜராத்தைச் சேர்ந்த விமானியான கேப்டன் ஸ்மித் மச்சார், பத்து ஆண்டுகளுக்கும் மேலான விமான ஓட்டுநர் அனுபவம் கொண்டவர். அவர் போயிங் 737 ரக விமானங்களில் 13 ஆண்டுகளுக்கும் மேலான வர்த்தக விமானப் பயண அனுபவம் கொண்ட ஒரு விமான நிறுவன கேப்டன் ஆவார். இதில் லைன் பயிற்சி கேப்டனாகப் பணியாற்றிய காலமும் அடங்கும். இதற்கு முன்பு, அவர் 2011 முதல் 2022 வரை இந்திய விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட்டில் விமானியாகப் பணியாற்றியுள்ளார். ஜூன் 2022-ல் ஃப்ளைதுபாயில் நேரடி நுழைவு கேப்டனாகச் சேர்ந்த அவர், மும்பையில் உள்ள ஃப்ளைபை ஏவியேஷன் அகாடமியில் பயிற்சி விமானிகளுக்கு வழிகாட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். காயமடைந்த இந்திய விமானி ஸ்மித் மச்சார் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.