இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா நாளை விண்வெளிக்கு செல்கிறார். இந்தியா சார்பில் விண்வெளிக்கு சென்ற முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை பெற்றவர் ராகேஷ் சர்மா. இவர் 1984ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் சோயுஸ் 11 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சென்றார். அதற்கு பிறகு விண்வெளிக்கு செல்லும் 2ஆவது இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு பெற உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட், டிராகன் என்ற விண்கலனை ஏந்திக்கொண்டு அமெரிக்காவிலுள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு நாளை விண்வெளிக்கு செல்கிறது.
இதில் இந்திய வீரர் உட்பட 4 நாட்டு வீரர்கள் செல்ல உள்ளனர். இந்த 4 பேரும் 14 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளனர். இந்த 4 பேரில் இந்திய வீரர்தான் விண்கலனின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பில் இருப்பார். இந்த விண்வெளி திட்டம் வெற்றியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்ளுமாறு இந்திய மக்களிடம் சுபான்ஷு சுக்லா கேட்டுக்கொண்டுள்ளார். நுண்ணிய புவிஈர்ப்பு விசை குறித்த 7 ஆய்வுகளை இப்பயணத்தின்போது மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தான் இந்தப் பயணத்தை மண்ணுக்கும் விண்ணுக்கும் அமைக்கும் பாலமாக கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.