மேகா வெமுரி முகநூல்
உலகம்

அமெரிக்கா|பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேசிய இந்திய வம்சாவளி மாணவி; பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தடை!

இருப்பினும், மேகா வெமுரி தனது பட்டத்தைப் பெறுவார் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

காசா போரை கண்டித்து உரையாற்றியதால், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி - MIT) படிக்கும் இந்திய வம்சாவளி மாணவி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேகா வெமுரி என்ற மாணவி, பட்டமளிப்புக்கு முந்தைய நிகழ்வில் உரையாற்றியபோது, காசாவில் நடத்தப்பட்டு வரும் போரை குறிப்பிட்டுப் பேசி, அதற்கு தனது கண்டனத்தையும் பதிவு செய்தார். கடந்த வியாழக்கிழமை மே 29 அன்று மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் நடைபெற்ற ‘ஒன்-எம்ஐடி’ (OneMIT) தொடக்க விழாவில் இவர் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, மேகா வெமுரி மீது பல்கலைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இதன்படி, மே 30 ஆம் தேதி நடந்த நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை. மேலும், பட்டமளிப்பு விழா முடியும் வரை பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், மேகா வெமுரி தனது பட்டத்தைப் பெறுவார் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து தெரிவிக்கையில், “எம்ஐடி கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறது. அதேநேரத்தில், மேகா வெமுரி மீதான நடவடிக்கையில் பல்கலைக்கழகம் உறுதியாக உள்ளது. ஏனெனில், அந்த நபர் வேண்டுமென்றே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தவறாக வழிநடத்தி மேடையில் இருந்து போராட்டத்தை வழிநடத்தி இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேகா வெமுரி, "இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் ஒரு நிறுவனத்தின் மேடையைக் கடந்து செல்ல வேண்டிய அவசியமில்லை என்று நான் கருதுகிறேன். எனினும், எம்ஐடி அதிகாரிகள் உரிய நடைமுறை இல்லாமல் என்னைத் தண்டிக்க முயன்றதால் பெருமளவில் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். நான் உரையாற்றியதால் பல்கலைக்கழகத்தின் எந்தவொரு விதியும் மீறப்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு, பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.