Anurag Chandra
Anurag Chandra  twitter page
உலகம்

காலிங் பெல் அழுத்தி பிராங்க் செய்த சிறுவர்கள்.. கோபத்தில் காரை ஏற்றிக் கொன்ற அமெரிக்க வாழ் இந்தியர்!

Prakash J

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிப்பவர் அனுராக் சந்திரா. 42 வயதான இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது வீட்டு வாசலில் உள்ள ஹாலிங் பெல்லை அடித்து, சில சிறுவர்கள் பிராங் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். இது, அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சிறுவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கில் வீட்டில் சிசிடிவி கேமராவை வைத்து கண்காணித்து வந்துள்ளார். என்றாலும், அவர்கள் தொடர்ந்து காலிங் பெல்லை அடித்தபடியே இருந்துள்ளனர்.

அவரும் விரட்டியபடியே இருந்துள்ளார். ஒருகட்டத்தில் ஹாலிங் பெல்லை அழுத்தி விளையாடிய சிறுவர்களில் ஒருவர், அனுராக் சந்திரா மீது தன்னுடைய இடுப்பின் கீழ் உள்ள பின்புறத்தை வைத்து தேய்த்துவிட்டு ஓடியதாகக் கூறப்படுகிறது. இதில் தாம் அவமானம் படுத்தப்பட்டதாகக் கருதிய அவர், அந்தச் சிறுவர்கள் மீது மேலும் ஆத்திரம் கொண்டுள்ளார்.

இதையடுத்து அவர்களைப் பழிவாங்கும் நோக்கில், தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு மணிக்கு 99 மைல் வேகத்தில் ஓட்டிச் சென்றுள்ளார். அவ்வளவு வேகத்தில் சென்ற சந்திரா, அந்த சிறுவர்கள் மீது மோதியுள்ளார். இதில் 3 சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்த சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 16 வயதுடையவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. சிறுவர்கள் படுகொலை சம்பவத்தில் சந்திராவை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை வழக்கு பதிவாகி உள்ளது.

இதுகுறித்த போலீசார் விசாரணையின்போது, “இதற்கு முன்பும் இதேபோன்று ஹாலிங் பெல் அடித்தபோது, அவர்களை தாம் துரத்தி விரட்டியத்தேன். ஆனால், இந்த முறை சம்பவம் நடந்தபோது, 12 பீர்களை குடித்திருந்தேன். இதை அவர்கள் ஒரு சவாலாகவே, அதேநேரத்தில் என்னை வெறுப்பேற்றும்படியே செய்து வந்தனர்” என சந்திரா தெரிவித்துள்ளார். தன் குடும்பத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும், சிறுவர்கள் மீது ஏற்பட்ட கோபத்தின் காரணமாகவுமே இந்தக் குற்றத்தைச் செய்ததாக சந்திரா போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 2020ஆம் ஆண்டு, ஜனவரி 19ஆம் தேதி நடைபெற்றுள்ளது. என்றாலும், இந்த வழக்கு விசாரணையில், கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.