உலகம்

Perseverance Rover-ன் வெற்றி: இந்திய அமெரிக்க பெண் விஞ்ஞானிக்கு குவியும் பாராட்டுகள்!

Sinekadhara

Perseverance Rover-இன் வெற்றிக்கு காரணமான இந்திய அமெரிக்க பெண் விஞ்ஞானிக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.

கடந்த வியாழக்கிழமை நாசாவின் பர்செவரன்ஸ் ரோவர்(Perseverance Rover) என்ற விண்கலம் செவ்வாய்க் கிரகத்தின் வளிமண்டல பாதையில் கீழே விழாமல் 7 நிமிடம் பயணித்து வெற்றிகரமாக செவ்வாய்க்கிரகத்தில் இறங்கியது. நாசாவின் இந்த திட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகளில் ஒருவர் இந்திய அமெரிக்கவாழ் பெண் டாக்டர் ஸ்வாதி மோகன்.

ரோவரின் பயணப்பாதை மற்றும் தரையிரங்கும் முறையை திட்டமிட்ட குழுவை தலைமை தாங்கி நடத்திய பெருமைக்குரியவர். ‘’தரையிறக்கம் உறுதி செய்யப்பட்டது. பர்செவரன்ஸ் செவ்வாயின் மேற்பரப்பில் பாதுகாப்பாக உள்ளது. கடந்தகால தடயங்களைத் தேடுவதற்கு தயாராக உள்ளது’’ என்று மகிழ்ச்சிபொங்க அறிவித்தவரும் இவர்தான். பர்செவரன்ஸ் ரோவரை வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியதற்காக ஸ்வாதி மோகனுக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.

ரோவரின் வடிவமைப்பு மற்றும் திட்டத்தை செயல்படுத்தும்போது தலைமை பொறியாளராக பணியாற்றி இருந்தாலும், GN&C உடன் தொடர்புகொள்வதுடன், குழுவை மேற்பார்வையிடுதல் மற்றும் பணிகளை திட்டமிடுதல் போன்ற அனைத்துப் பொறுப்புகளையும் தாமே முன்னெடுத்து செய்திருக்கிறார்.

தனது ஒரு வயதில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த டாக்டர் ஸ்வாதி, வடக்கு வெர்ஜினியா - வாஷிங்டன் பகுதிகளில் வாழ்ந்திருக்கிறார். 9 வயதில் ‘ஸ்டார் ட்ரெக்’ திரைப்படத்தைப் பார்த்த ஸ்வாதிக்கு விண்வெளி மற்றும் பிற கிரகங்களின்மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்போதே விண்வெளியிலுள்ள அழகிய இடங்களை கண்டறியவேண்டும் என மனதில் தீர்மானித்திருக்கிறார். அதேசமயம் தன்னுடைய 16 வயதுவரை ஒரு குழந்தைகள் நல மருத்துவராக வேண்டும் என்றும் யோசித்திருக்கிறார். ஆனால் இயற்பியல் ஆசிரியரின் உந்துதலால் பொறியியல் படிப்பில் சேர்ந்து மெக்கானிக்கல் மற்றும் ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் படித்து பட்டம் பெற்றார். பிறகு விண்வெளித் துறையில் எம்.எஸ் மற்றும் பி.ஹெச்டி பட்டங்களைப் பெற்றார்.

நாசாவின் ஜெட் ப்ரபல்ஷன் ஆய்வகத்தில் சேர்ந்ததிலிருந்து பர்செவரென்ஸ் ரோவர் திட்டத்தில் இணைந்து பணியாற்றியதுவரை ஸ்வாதி Cassini, GRAIL போன்ற நாசாவின் பல முக்கிய திட்டங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.