2022-ஆம் ஆண்டில், பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடிக்கும் என ஐ.எம்.எஃப் (International Monetary Fund) தெரிவித்துள்ளது.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக கடந்த நவம்பர் மாதம் மோடி அரசு நடைமுறைபடுத்திய பணமதிப்பிழப்பை பெருவாரியான மக்களால் வரவேற்கப்பட்டாலும், அது நாட்டின் வளர்ச்சியில் பாதிப்பையும் ஏற்படுத்தியது.
2016 ஆம் ஆண்டில் நம் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 7.4 இல் இருந்து 6.9 ஆக குறைந்துள்ளது. பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ச் 2017 ஆம் ஆண்டுக்கான இந்திய வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. கடந்த நிதியாண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 7.6 இல் இருந்து 7.1 ஆக குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கணித்தது. பணமதிப்பிழப்பு 86 சதவீத பண புழக்கத்தை முடக்கியது என்று இந்துஸ்தான் டைம்ஸ் கூறியுள்ளது. இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா ஜெர்மனியை முந்தும் என்று ஒரு ஆச்சரியமளிக்கும் கணிப்பு ஒன்றை ஐஎம்எப் கூறியுள்ளது.
இதுகுறித்து ஐ.எம்.எஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த ஐந்து வருடத்தில், பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளில் நான்காவது இடத்தில் இருக்கும் ஜெர்மனி பின்னுக்கு தள்ளப்பட்டு, அந்த இடத்தை இந்தியா பிடிக்கும். பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து நாடுகளில் இருந்தே ஐரோப்பிய ஒன்றியம் பின்னுக்கு தள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இந்த இலக்கை அடையவது இந்தியாவிற்கு சுலபமானதாக இருக்காது என்று ஐ.எம்.எஃப். எச்சரிக்கவும் செய்துள்ளது.
ஐ.எம்.எஃப்.இன் இணை மேளாண்மை இயக்குனர் டா சாங், இந்தியாவும், சீனாவும் கைகோர்க்கும் பட்சத்தில் உலகின் பாதி உற்பத்தியை இவ்விரு நாடுகளே தன்வசம் வைத்திருக்கும். இந்த கூட்டணி உலகிற்கு மிகத் தேவையானது என்றும் கூறியுள்ளார். நாடுகளுக்கிடையேயான கூட்டணி மற்றும் சிறந்த கொள்கை முடிவுகள், உறுதியான, நீடித்த, சமநிலையான வளர்சியை சாதிக்க ஏதுவாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், உலகின் வளர்ச்சியில் பாதி பொறுப்பு இந்தியாவிற்கும், சீனாவிற்கும் உள்ளது. இந்த இரு பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டணி, அவர்களின் மக்களுக்கும், உலகத்திற்கும் மிக அவசியமானது என்றும் கூறினார்.