அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. குறிப்பாக, பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியது அரசையே கலங்கடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முகமது யூனுஸின் நெருங்கிய உதவியாளரும் இடைக்கால அரசாங்கத்தின் ஆலோசகருமான மஹ்ஃபுஸ் ஆலம், ”மேற்கு வங்காளம், அசாம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் வங்காளதேசத்தின் ஒரு பகுதி” எனக் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரை நினைவுகூரும் வகையில், ‘விஜய் திவாஸ் தின’த்தில் இந்தப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அப்போதுதான், இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பிரதேசங்களின் சில பகுதிகளை இணைப்பது பற்றி ஆலம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த பதிவை, ஆலம் தனது முகநூல் பக்கத்தில், விஜய் திவாஸ் தினத்தில் பதிவிட்டுள்ளார். மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களை வங்காளதேசத்தின் பகுதிகளாக காட்டும் வரைபடமும் ஃபேஸ்புக் பதிவில் உள்ளது. மேலும் அவர், “இந்தியாவின் வடகிழக்கு மற்றும் வங்காளதேசம் ஒரே மாதிரியான கலாசாரங்களைப் பகிர்ந்துகொள்கின்றன. கிழக்கு வங்காளத்தின் உருவாக்கம் உயர்சாதி இந்துக்கள்தான். இந்து தீவிரவாதிகளின் வங்காள எதிர்ப்பு, அணுகுமுறையின் விளைவாகும். இந்தியா கட்டுப்பாடு மற்றும் காலனித்துவ திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து உண்மையான சுதந்திரத்தை உறுதிப்படுத்த, 1975 மற்றும் 2024 ஆம் ஆண்டை மீண்டும் செய்ய வேண்டும்" என அவர் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, அந்தப் பதிவு முகநூல் பக்கத்தில் நீக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியாவை இணைப்பது குறித்த வங்காளதேச அமைச்சரின் கருத்தைக் கண்டித்துள்ள வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ”பொதுவெளியில் கூறப்படும் கருத்துகளை இடைக்கால அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்” என எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர், “இந்தப் பிரச்னையில் நாங்கள் வங்கதேசத் தரப்பிடம் எங்கள் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளோம். குறிப்பிடப்பட்ட பதிவு, நீக்கப்பட்டதாக நாங்கள் புரிந்துகொள்கிறோம். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அவர்களின் பொதுக் கருத்துகளை கவனத்தில் கொள்ளுமாறு நாங்கள் நினைவூட்ட விரும்புகிறோம். மக்கள் மற்றும் வங்கதேச இடைக்கால அரசாங்கத்துடன் உறவுகளை வளர்ப்பதில் இந்தியா மீண்டும் மீண்டும் ஆர்வம் காட்டினாலும், இதுபோன்ற கருத்துகள் பொது வெளிப்பாட்டின் பொறுப்பின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என அவர் எச்சரித்துள்ளார்.