பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கும், ‘நியூயார்க் பிரகடனத்துக்கு’ ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது 19ஆம் நூற்றாண்டில் இருந்தே தொடர்கிறது. இருந்தபோதும், அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 815 பொதுமக்கள் உட்பட 1,195 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். அதோடு, 251 பேர் பிணைக்கைதிகளாகப் கொண்டு செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இடையில் பேச்சுவார்த்தை ஏற்பட்டு சில நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும், மறுபடியும் இன்றுவரை போர் தொடர்கிறது. இதுவரை அங்கு 64,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கின்றனர். இதற்கிடையே, ஹமாஸ் வசம் உள்ள தங்கள் நாட்டு பிணைக்கைதிகள் 58 பேர் விடுவிக்கப்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என எச்சரித்துள்ள இஸ்ரேல், காஸாவை தங்கள் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது. மேலும், காஸா நகரின் 80 விழுக்காடுக்கும் அதிகமான பகுதிகள் தங்கள் ராணுவக் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால், காஸா நகர குடிமக்கள் வெளியேற வேண்டுமென இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், காஸா மீது இஸ்ரேல் கடுமையாகப் போர்புரிந்து வரும் நிலையில், ஐநா சபையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் வகையில் நியூயார்க் பிரகடனம் கொண்டுவரப்பட்டது. இது, கடந்த ஜூலை மாதம், 17 ஐ.நா. உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு இணைந்து கையொப்பமிடப்பட்டது. தற்போது இந்தப் பிரகடனத்துக்கு ஆதரவாக, இந்தியா உள்ளிட்ட 142 நாடுகள் வாக்களித்தன. இஸ்ரேல், அமெரிக்கா, அர்ஜென்டினா, ஹங்கேரி, மைக்ரோனேஷியா, நௌரு, பலாவ், பப்புவா நியூ கினியா, பராகுவே மற்றும் டோங்கா உள்ளிட்ட 10 நாடுகள் எதிராக வாக்களித்தன; 12 நாடுகள் வாக்களிக்காமல் தவிர்த்துள்ளன. அரபு அல்லாத நாடுகளில் முதல்முறையாக பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரித்த நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இதில், ஆதரவாக வாக்களித்ததன் மூலம், பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமை குறித்த தனது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அமைதிக்கான பாதைகளாக உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தைக்கான தனது அழைப்பை வலுப்படுத்தியுள்ளது.
மறுபுறம், செப்டம்பர் 22ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறவிருக்கும் ஐ.நா. உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இந்த வாக்கெடுப்புகள் வந்துள்ளன. இந்த உச்சிமாநாட்டிற்கு ரியாத் மற்றும் பாரிஸ் இணைந்து தலைமை தாங்குகின்றன. அந்த உச்சிமாநாட்டில், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதாக உறுதியளித்துள்ளார்.
பிரான்ஸால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தீர்மானம், காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், இஸ்ரேலுடன் இணைந்து ஓர் இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கும் புதுப்பிக்கப்பட்ட உலகளாவிய உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கு இருதரப்பினரும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.
மேலும், ’நியூயார்க் பிரகடனம்' இஸ்ரேலைக் குடியேற்ற நடவடிக்கைகளை நிறுத்தவும், நிலக் கையகப்படுத்துதல்களை நிறுத்தவும், குறிப்பாக கிழக்கு ஜெருசலேம் போன்ற ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் எந்தவொரு இணைப்புத் திட்டத்தையும் கைவிடவும் கோருகிறது. இருப்பினும், அமைதியான இரு அரசு தீர்வை அடைய, ஹமாஸ் காஸாவில் அதன் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து அதன் ஆயுதங்களை பாலஸ்தீன அதிகார சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நியூயார்க் பிரகடனம் கேட்டுக்கொள்கிறது. அதேநேரத்தில், இஸ்ரேலிய பொதுமக்கள் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கும், பணயக்கைதிகளை பிடித்ததற்கும் கண்டனம் தெரிவிக்கிறது. மேலும், காஸாவில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களையும் இது கண்டிக்கிறது.
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் தூண்டுதலுக்கு உடனடி முடிவு.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் அனைத்துக் குடியேற்றங்கள் மற்றும் இணைப்பு நடவடிக்கைகளையும் நிறுத்துதல்.
எந்தவொரு இணைப்பு அல்லது குடியேற்றக் கொள்கைகளையும் இஸ்ரேல் பகிரங்கமாகக் கைவிடுதல்.
ஆக்கிரமிப்பு, முற்றுகை அல்லது கட்டாய இடப்பெயர்ச்சி இல்லாத ஒருங்கிணைந்த பாலஸ்தீன அரசின் ஒருங்கிணைந்த பகுதியாக காஸாவை அங்கீகரிப்பது.