கொரோனா வைரஸூக்கு எதிராக இந்தியா-அமெரிக்கா இணைந்து முழு பலத்துடன் போராடும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவைச் சூறையாடியுள்ளது. அதேசமயம் வளரும் நாடான இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதுதவிர உலகின் பல்வேறு நாடுகளையும் கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலின்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்து இருநாட்டுத் தலைவர்களும் பேசியுள்ளனர். அத்துடன் கொரோனாவிற்கு எதிராக இரண்டு நாடுகளும் இணைந்து போராடுவது தொடர்பாக ஆலோசித்ததாகத் தெரிகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் பேசியது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “கொரோனா வைரஸ் தொடர்பாக நீண்ட உரையாடலை அதிபர் ட்ரம்ப்புடன் மேற்கொண்டேன். நாங்கள் சிறந்த ஆலோசனைகளைச் செய்தோம். அத்துடன் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் முழு பலத்துடன் இணைந்து போராடுவது என ஒப்புக்கொண்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.