Donald Trump Ani
உலகம்

இந்தியாவுக்கு இனி 100% வரி.. US-ல் நிறைவேறியது மசோதா.. பாதிப்பு யாருக்கு?

இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மசோதா ஒன்றிற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. முழு விவரம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஹாஜிராபானு அ

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலை நிறுத்தக் கோரி புதினுக்கு பலவாறு தொடர் அழுத்தங்களை கொடுத்துவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்போது பிற நாடுகள் வாயிலாக அந்த அழுத்தத்தை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறார். உக்ரைன் மீதான போரை நிறுத்தினால் நாட்டு மக்கள் தன்னை தூக்கி எறிந்துவிடுவார்கள் என ரஷ்ய அதிபர் நம்புவதாக கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்ய அரசியல் வட்டாரங்கள் பேசின.

Russian Crude Oil

எனவே தற்போதைக்கு ரஷ்யா இந்த போரை நிறுத்தும் முடிவில் இல்லை என்பது தெரிய வருவதாகவே சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து அதன் மூலம் ரஷ்யாவுக்கு பாடம் புகட்டி, போரை நிறுத்த வைக்க வேண்டும் என்பதே ட்ரம்பின் திட்டமாக இருக்கிறது.

அப்படி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் என்று பார்க்கும்போது முதலிடத்தில் இருப்பது சீனா. நாட்டின் தேவையில் சுமார் 50% கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து சீனா வாங்குகிறது. இரண்டாவதாக இருப்பது இந்தியா. இது 37% இறக்குமதி செய்கிறது. ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, அஜர்பைஜான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த வரிசையில் உள்ளன.

இந்நிலையில், இந்த நாடுகள் மீது வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அதிபருக்கு ஏகபோகத்தில் வழங்குவதற்கான மசோதா தான் தற்போது நிறைவேறியிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறிய இந்த மசோதா, பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அந்த சபையும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

iran war

2026-ஆம் ஆண்டின் ரஷ்யா மற்றும் ஈரான் மீது தடைகள் விதிப்பதற்கான லிண்ட்சே ஓ. கிரஹாம் சட்டம் என்ற இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியிருக்கும் நிலையில், மசோதா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட வேண்டியது மட்டும்தான் பாக்கி.

அமெரிக்க அதிபர் கையெழுத்திட்ட பின் சட்டமாக உருமாறும் இந்த மசோதாவால், சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நேரடியாக பாதிக்கப்பட உள்ளன. இது சட்டமாகும் பட்சத்தில், சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது 100% வரியை எந்த காரண காரியமும் இன்றி அமெரிக்க அதிபரால் விதிக்க முடியும்.

இது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக் கூடிய நாடுகளை அழுத்தத்தில் தள்ளி, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க முடியாத நிலையை உருவாக்கும். அமெரிக்காவின் இந்த செயல் ரஷ்யாவின் போர் நிறுத்த நடவடிக்கைக்கு இது எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பதைத் தாண்டி, சம்பந்தப்பட்ட நாட்டு மக்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.