கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில், இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா உள்ளது. லெபனானில் இயங்கிவரும் இந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஈரான் ஆதரவாக உள்ளது. இதனால் போர், கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர். இவர்களைத் தவிர இந்தப் போரில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும், போர் காரணமாக சுமார் 12 லட்சம் பேர், தங்கள் இடங்களை விட்டு வெளியேறியிருந்தனர்.
இந்தச் சூழலில், அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் மாற்றம் காரணமாக, விரைவில் இங்கு போர் நிறுத்தம் ஏற்படலாம் எனக் கூறப்பட்டது. இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய இருநாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே, கடந்த நவம்பர் 27ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இஸ்ரேல் மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டிய நிலையிலும், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்டு ட்ரம்ப், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதியன்று தாம் பதவியேற்பதற்கு முன்பு பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய நாட்டுப் பொதுச் சபை, காஸா போரை உடனடியாக நிறுத்தச் சொல்லி வாக்களித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 193 உறுப்பு நாடுகள் இந்த வாக்களிப்பில் கலந்து கொண்டன. இதில், 158 உறுப்பினர்கள், போர் நிறுத்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதில், இந்தியாவும் ஆதரவாக வாக்களித்துள்ளது. அதேநேரத்தில், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 7 நாடுகள் சண்டை நிறுத்ததிற்கு எதிராக வாக்களித்தன. 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
‘காஸா போரை நிரந்தரமாக, நிபந்தனையின்றி உடனடியாக நிறுத்தவேண்டும்; உடனே பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ என ஐக்கிய நாட்டுப் பொதுச் சபை தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளது. பெரும்பான்மை நாடுகள் போரை நிறுத்தச் சொல்வது உலகக் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கிறது. முன்னதாக, மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்துமாறு சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கேட்டுக்கொண்டது. பிறகு சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் போரை நிறுத்துமாறு சபை எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.