Netanyahu & Modi reuters
உலகம்

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பிய இந்தியா.. அம்னஸ்டி பரபரப்பு குற்றச்சாட்டு!

இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி செய்ததாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

PT WEB

இஸ்ரேல்–ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து காசாவில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நிகழும் நிலையில், இந்தியா இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்து வருவதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் குற்றம்சாட்டியுள்ளது. “மேட் இன் இந்தியா” அறிக்கையில் 2023 அக்டோபர் 7 முதல் 2025 நவம்பர் வரை குறைந்தது 2,596 ஏற்றுமதி கப்பல்கள் இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு சென்றதாக ஆவணங்கள் கூறுகிறது.

செய்தியாளர் - M. மீரா

2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல்–ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து, காசாவில் பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதங்கள் மற்றும் ராணுவ உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்து வருவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் குற்றம்சாட்டியுள்ளது.

Amnesty International

அம்னஸ்டி வெளியிட்டுள்ள “மேட் இன் இந்தியா: இஸ்ரேலுக்கான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் விநியோகம்” என்ற 42 பக்க அறிக்கையில், 2023 அக்டோபர் 7 முதல் 2025 நவம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் தொடர்பான குறைந்தபட்சம் 2,596 ஏற்றுமதி கப்பல்கள் சென்றது என்று ஆவணங்கள் இருக்கிறது என்று ஆம்னெஸ்டி தெரிவித்துள்ளது.

இந்த ஏற்றுமதிகளில் 3.9 லட்சத்துக்கும் அதிகமான சிறிய ரக துப்பாக்கி பாகங்கள், 5.6 லட்சத்துக்கும் அதிகமான ட்ரோன் போர்க்கப்பல்கள் மற்றும் பீரங்கி குண்டுகளுக்கான உதிரிபாகங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும், இந்திய அரசுக்குச் சொந்தமான முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் (Munitions India Limited) உள்ளிட்ட பல்வேறு இந்திய நிறுவனங்கள் இத்தகைய ஏற்றுமதிகளில் ஈடுபட்டுள்ளதாக அம்னஸ்டி தெரிவித்துள்ளது. இந்த உபகரணங்கள் இஸ்ரேலின் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த எல்பிட் சிஸ்டம்ஸ் மற்றும் ரஃபேல் உள்ளிட்ட நிறுவனங்களைச் சென்றடைந்ததாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Israel - Gaza war

அம்னஸ்டி இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் அக்னஸ் காலாமார்ட், காசாவில் கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச கவலைகள் தொடரும் நிலையிலும், இஸ்ரேலிய பாதுகாப்புத் துறைக்கு இந்திய நிறுவனங்கள் மூலம் பொருட்கள் வழங்கப்படுவதாக விமர்சித்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேலுக்கு இந்தியா வழங்கும் ஆயுதங்கள் மற்றும் ராணுவ உதிரிபாகங்கள் தொடர்பான விவகாரம் சர்வதேச அளவில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.