ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் பிரதிநிதியான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த நிலையில், தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பை, ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாதக் குழுவாகப் பட்டியலிடுவதற்கான முயற்சிகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய குழு ஒன்று ஐநாவின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவை சந்தித்துப் பேசியுள்ளது. பஹல்காம் தாக்குதலை ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடுமையாக கண்டித்திருந்த போதும் அதற்கு காரணமான டிஆர்எஃப் பயங்கரவாத அமைப்பு குறித்து கண்டன அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத அமைப்புகளை அழிப்பதற்கு புதிய மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் இச்சந்திப்பின்போது பேசப்பட்டதாக தெரிகிறது.
முன்னதாக, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய ராணுவம் ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் கூடாரங்களை அழித்தது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலைத் தொடங்க, அதற்கும் இந்தியா பதிலடி கொடுத்தது. இதற்கிடையே இருதரப்பு தாக்குதலுக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததைத் தொடர்ந்து, தாக்குதல் முடிவுக்கு வந்தது.